ராம்ஜி நகர் கொள்ளையர்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே கைவரிசை : பாதை மாறியது ஏன்?

சென்னை கொள்ளை தொடர்பாக 8 பேர் கைது
ராம்ஜி நகர் கொள்ளையர்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே கைவரிசை : பாதை மாறியது ஏன்?

சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் செப்டம்பர் 4-ம் தேதி, அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் துணி எடுப்பதற்காக தனது காரில் கடைக்குச் சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்த லேப்டாப் மற்றும் ரூ.30, 000 பணம் திருட்டுபோனதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து திருமங்கலம், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் இதேபோன்ற புகார்கள் வந்தன. போலீஸார் விசாரணையில், ஒரே கும்பல் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

8 லேப்டாப் மற்றும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபாய் பணம் போலீஸார் பறிமுதல்

பின்னர் போலீஸார், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் இரண்டாகப் பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைப் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது கொள்ளையர்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்தில் ஏறி சென்றதும் பெங்களூரில் தொடர்ந்து ஒரு ஏஜெண்டிடம் கொள்ளையர்கள் பேசி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கவனத்தை திசைதிருப்பும் உத்தி

இதையடுத்து தனிப்படை போலீஸார் பெங்களூருக்கு விரைந்து சென்று, அங்குள்ள சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கொள்ளையர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியை கண்டுபிடித்தனர். பின்னர் விடுதியில் தங்கியிருந்த 8 நபர்களைக் கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த கொள்ளையர்கள் சுப்பிரமணி (48), ரோகன் (24), தினு ஆனந்த் (25), தினேஷ் குமார் (25), தீனதயாளன் (22), கிரண் குமார் (23), ராஜாராம் (29) மற்றும் சிறார் ஒருவர் என்பது தெரியவந்தது.

மேலும் திருச்சி, ராம்ஜி நகர் பகுதி மக்கள் அனைவருமே நூதன முறையில் கவனத்தைத் திசைதிருப்பிக் கொள்ளையடிப்பதுடன், புதிதாக கொள்ளையடிக்கக் கற்றுக்கொண்டு பின்னர் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆண் நபர்களின் தகுதியை வைத்து, அந்த ஊர் மக்கள் கொள்ளையில் அவர்களுக்குண்டான பணியை ஒதுக்குவதுடன், ஊர் மக்கள் சாமியாரிடம் குறிகேட்டு அவர் எந்த ஊரில் கொள்ளையடிக்கச் சொல்கிறாரோ அந்த ஊருக்குச் சென்று கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ரப்பர்பேண்ட், சாக்லேட் கவர், இரும்பு குண்டு, ஸ்லைடு உள்ளிட்ட பொருட்களை வைத்து கவண்போல செய்து சத்தமில்லாமல் காரின் கண்ணாடியை உடைத்துத் திருட்டு.

சாமியாரும் சரிசமமும்!

சாமியாரின் பேச்சை மீறி மதுபோதை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கொள்ளையடித்தால் போலீஸாரிடம் சிக்கிவிடுவோம் என்பதை, ஊர் மக்கள் ஐதிகமாக நினைத்துக் கொள்ளையடித்து வருகின்றனர். ராம்ஜி நகருக்குள் கொள்ளை கும்பலைப் பிடிக்கச் சென்றால், அந்த ஊர் பெண்கள் துணிகளை அவிழ்த்துவிட்டு போலீஸாரை மிரட்டுவதுடன் அவர்களை அடித்து துரத்தி அனுப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

மேலும் இவர்கள் கும்பலாகச் சென்று கொள்ளையடித்துவிட்டு, அதில் வரும் பணத்தைச் சரிசமமாகப் பிரித்துக் கொண்டு ஊருக்குச் சென்றுவிடுவது வழக்கம். இதேபோல்தான் 8 பேர் கொண்ட கும்பல் 2 குழுக்களாகப் பிரிந்து அண்ணா நகர், திருமங்கலம் பகுதியில் கடைக்கு வெளியே நிற்கும் சொகுசு காரை குறிவைத்து, நூதன முறையில் காரின் கண்ணாடியை உடைத்து லேப்டாப் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு பெங்களூருக்குச் சென்றுள்ளனர். அங்கும் 5 லேப்டாப்களைத் திருடியதும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 8 லேப்டாப் மற்றும் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 500 பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையர்கள் ரப்பர்பேண்ட், சாக்லேட் கவர், இரும்பு குண்டு, ஸ்லைடு உள்ளிட்ட பொருட்களை வைத்து கவண்போல செய்து சத்தமில்லாமல் காரின் கண்ணாடியை உடைத்து நூதன முறையில் திருடுவதை நடித்துக் காட்டிய வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

தமிழகத்தில் திடீர் கைவரிசை

கரோனா பொது முடக்கத்துக்குப் பின்பு ராம்ஜி நகர் கொள்ளையர்களின் பாணி முற்றிலும் மாறியிருக்கிறது. மக்கள் கையில், வீடுகளில் பணம் இருப்பதில்லை, நகைகளும் இல்லை என்பதை அறிந்துகொண்ட பின் தங்களுடைய பாணியை மாற்றி இருக்கின்றனர் ராம்ஜி நகர் கொள்ளையர்கள்.

தமிழ்நாட்டுக்குள்ளும் பிற மாநிலங்களில் தமிழ் பேசுகிறவர்களிடமும் கொள்ளை அடிப்பது இல்லை என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. தற்போது அதில் மாறுதல் தெரிகிறது. தமிழ்நாட்டுக்குள்ளேயே கொள்ளைச் சம்பவங்களில் இறங்கிவிட்டார்கள். வட மாநிலங்களில் சுத்தமாகப் பொருளாதார வளர்ச்சி குன்றிப்போய் வருமானம் இல்லாத நிலை நீடிப்பதால், தமிழ்நாட்டுக்குள் இவர்களின் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

மதுரை, திண்டுக்கல், சென்னை, சேலம், கோவை ஆகிய முக்கிய நகரங்களில் இப்போது கண் பதித்திருக்கிறார்கள். கவனத்தைத் திருப்பி நகை, பணம் கொள்ளை அடிக்கும் பாணியிலிருந்து காரிலிருக்கும் பை, லேப்டாப், செல்போன் ஆகியவற்றைத் திருடும் பழக்கத்துக்கு மாறியிருக்கிறார்கள்.

ஒரு கார் வருகிறது என்றால் அதில் அவர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் நிச்சயம் இருக்கிறது என்பது அவர்களின் முடிவு. ஒரு லேப்டாப் மற்றும் செல்போன் ஆகிய இரண்டும் ரூபாய் முப்பதாயிரம் மதிப்பு. அத்துடன் பணப்பையோ நகைகளோ இருந்தால் அவர்களின் கூடுதல் அதிர்ஷ்டம். எப்படிப்பட்ட காராக இருந்தாலும் அந்த காரின் கண்ணாடியை இவர்களால் திறந்து விட முடியும். அதற்கு இவர்கள் கையாளுவது கையடக்க உண்டிவில் ஒன்றைத்தான். ஊரில் இதற்காகச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்த உண்டி வில்லில் பேரிங்பால்ரஸ் வைத்து தூரத்திலிருந்து அடிப்பார்கள். அது கண்ணாடியில் பட்டவுடன் கண்ணாடி உடையாது. ஆனால், அதிர்வு தாங்காமல் கண்ணாடி கொஞ்சம் இறங்கும். அதன் பின்னர் 4 பேர் அந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருப்பதுபோல தெரியும். அவர்களில் ஒருவர் கார் கண்ணாடியை இறக்கி கதவைத் திறந்து அங்கிருக்கும் பையை எடுத்துவிடுவார். அடுத்த நிமிடமே அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள்.

பெரிய மனிதர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் லேப்டாப் மற்றும் கைப்பேசிகளைக் கொள்ளை அடித்தால், இவர்களைப் பற்றிய தகவல் அறிந்து உரியவர்கள் வந்து திருச்சி மாநகர போலீஸார் மூலம் கேட்டால் அவர்களிடம் ஒப்படைத்து விடுவது இவர்களது வழக்கம்.

கஞ்சா தொழிலுக்கு மாறிய கொள்ளையர்கள்

தற்போது பொருளாதார புழக்கம் மிகக் குறைவாக இருப்பதால், கொள்ளைச் சம்பவங்களைக் குறைத்துக்கொண்டு கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதாகவும் தெரியவருகிறது. தமிழ்நாட்டுக்குள் அவர்களுக்கு இருக்கும் நெட்வொர்க் மற்றும் வடமாநிலங்களில் இருக்கும் தொடர்புகள் ஆகியவற்றை வைத்து மிகச்சுலபமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். மிகப்பெரிய அளவிலான கடத்தல் இவர்கள் மூலமாக நடந்து வருகிறது. இதில் அதிக அளவு வருமானம் கிடைப்பதால், புதிதாகத் தொழிலுக்கு வரும் இளைஞர்கள் கஞ்சா கடத்தலுக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in