`சிறைத்துறை ஊழலில் சிக்கப்போவது யார்?'

`சிறைத்துறை ஊழலில் சிக்கப்போவது யார்?'

மதுரை மத்திய சிறையில் நடந்த பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு குறித்து தணிக்கைத்துறையினர் மறு ஆய்வு செய்வதால் அதிகாரிகள் பலர் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். சிறையில் தண்டனைக் காலத்தில் கைதிகள் திருந்துவதற்காக பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்படுகிறது. அப்படி கைதிகள் உருவாக்கும் பொருட்கள் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

அப்படி அனுப்பி வைக்கப்பட்ட பொருட்கள் பெயரில்தான், மதுரை மத்திய சிறையில் 100 கோடி ரூபாய் அளவில் மெகா ஊழல் நடந்ததாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதுகுறித்த விசாரணையில், கடந்த 2016-2021-ம் ஆண்டு வரை இந்த ஊழல் நடந்தது தெரியவந்தது. குறிப்பாக, 2016-2019 ஜூன் மாதம் வரை மட்டுமே 30 கோடி ரூபாய் அளவில் மதுரை மத்திய சிறையில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. அந்த ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் தணிக்கையும் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 2.7.2019-ல் மதுரை மத்திய சிறையில் இருந்து , மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிறிய கடித உறைகள் 5 ஆயிரம் , நடுத்தர கடித உறைகள் 5 ஆயிரம் , ஃபைல் பேடு 250 பெற்றுள்ளனர். ஆனால், சிறைத்துறை ஆவணத்தில் சிறிய கடித உறைகள் 50 ஆயிரம், மீடியம் கடித உறைகள் 1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கியதாகக் கணக்குக் காட்டப்பட்டது. இதே போல ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி நீதிமன்றம், சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றிற்கு கூடுதலாகப் பொருட்கள் வழங்கப்பட்டதாக போலியாகக் கணக்குக் காட்டப்பட்டது. இந்த விஷயங்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம் ( ஆர்டிஐ) மூலம் அம்பலமானது. இதனால் சிறைத்துறை ஆவணங்களைத் திருத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குநர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். "ஆயிரக்கணக்கான உறைகள் தயாரிக்கப்பட்டதாக மட்டுமே தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கிடைத்த நிலையில், லட்சக்கணக்கான எண்ணிக்கையில் விற்றதற்கான ஆதாரங்கள் இல்லாமல் பொதுநல மனுத்தாக்கல் செய்ய முடியாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மதுரை சிறை ஊழல் குறித்து முழுமையான விவரங்களுடன் புதிய வழக்கைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தியதை அடுத்து, அவர் வழக்கை வாபஸ் பெற்றார். இந்நிலையில் போதுமான விவரங்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, சிறைத்துறை ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தும்படி, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து நிவாரணம் பெற அறிவுறுத்தியது. மேலும், இந்த ஊழல் வழக்குத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இந்த உத்தரவு தடையாக இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து திருத்தப்பட்ட ஆவணங்களைக் கொண்டு மாநில தணிக்கைத்துறை அதிகாரிகள் ஜவஹர், ஸ்ரீதர் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் கடந்த 2 நாட்களாக தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, " 2021-ம் ஆண்டே சிறைத்துறை சார்பில் தணிக்கை நடைபெற்றது. அப்போதே இந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறைந்த அளவே வேலை செய்தவர்களுக்கு கூடுதலாக சம்பளம் ஊதிய ஈட்டுப்பிரிவின் மூலம் வழங்கப்பட்டது தெரியவந்தது. அதைச் சரிகட்ட நடந்த முயற்சிக்கு மதுரை சிறையில் இருந்த உயர் அதிகாரி உடன்படாத காரணத்தால் அவர் வெளியூர் மாற்றப்பட்டார். இந்த பொருட்கள் உற்பத்தி தொடர்பாக அப்போதைய பண்டகசாலை காப்பாளராக இருந்தவரைப் பயன்படுத்தி பல உயர் அதிகாரிகள் லாபம் அடைந்துள்ளனர். எனவே, இந்த மறுதணிக்கையால் பலர் உறுதியாக சிக்குவார்கள்" என்று கூறினர்.

Related Stories

No stories found.