இளம் குற்றவாளிகள் அதிகரிக்க யார் காரணம்?

இளம் குற்றவாளிகள் அதிகரிக்க யார் காரணம்?

விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை திமுக இளைஞரணி நிர்வாகி உள்பட 8 பேர் பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரில் நான்கு பேர் சிறுவர்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் வழிப்பறி, செயின் பறிப்பு, கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் இளம் குற்றவாளிகள் ஈடுபடுவது அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின்படி, இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை 2,376 ஆக இருந்தது. 2018-ம் ஆண்டு 2,304, 2019-ம் ஆண்டு 2,686, 2020-ம் ஆண்டு 3,394 ஆக பதிவாகியுள்ளன. இதில் 2020ல் பதிவான 3,394 வழக்குகளில் 104 சிறார்கள் கொலைக்குற்றத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது தான் அதிர்ச்சியான செய்தியாகும்.

எஸ்.நல்லதம்பி
எஸ்.நல்லதம்பி

குற்றங்களில் ஈடுபடும் 18 வயதிற்குட்பட்ட இளம் குற்றவாளிகள், கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பளிக்கப்படுகிறதா என்று இளம் குற்றவாளிகளை ஆற்றுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெற்ற மதுரை மத்திய சிறைத்துறை உதவி அலுவலர் எஸ்.நல்லதம்பியிடம் கேட்டோம். அவர் கூறுகையில், “குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறை செல்லக்கூடிய இளம் குற்றவாளிகள் பெரும்பாலானோர் தாயோ, தந்தையோ அல்லது பெற்றோரை இழந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் சமூகத்தில், குடும்பத்தில் புறக்கணிக்கப்பட்ட அவர்கள், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் நெருக்கமாக இருப்பதால் குற்றவாளியாகின்றனர். மேலும் பெற்றோர், ஆசிரியர் கவனிப்பின்மை காரணமாக பலர் இளம் குற்றவாளியாகின்றனர்.

'உங்களுக்கு தேசத்தலைவர்கள் யார் யாரைத் தெரியும்?' என்று சிறையில் இளம் குற்றவாளிகளிடம் கேட்டது போது, முத்துராமலிங்கத்தேவர், வ.உ.சிதம்பரனார், காமராஜரை தெரியும் என்றார்கள். அவர்களுக்கு பகத்சிங்கையோ, அம்பேத்கரையோ தெரியவில்லை. பாரதியாருக்கும், பாரதிதாசனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. எனவே, எழுத்துக்கூட்டி படிக்க வைக்கும் இடமாகத்தான் கல்வி நிலையங்கள் உள்ளன. சமூககல்வியைக் கற்றுத்தரும் இடமாக பள்ளிகள் இல்லை. அத்துடன் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. அதுவும் நடத்த வேண்டும்" என்றார்.

இவற்றை செய்வதன் மூலம் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியுமா என்று அவரிடம் கேட்டதற்கு, "கட்டாயம் முடியாது. முதல் முதலாக குற்றம் செய்து விட்டு கூர்நோக்கு இல்லத்திற்கோ, மாவட்ட சிறைக்கோ வரும் இளம் குற்றவாளிகளை தனித்து வைக்க வேண்டும். அவர்களை உரிய முறையில் நெறிப்படுத்துவதுடன், அவர்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்த வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் குற்ற மனதை மாற்ற முடியும். முதல் குற்றம் செய்து மாவட்ட சிறைகளுக்கு செல்லும் 18 முதல் 21 வயது இளம் குற்றவாளிகளின் சாதிய மனநிலை அறிந்து பெரிய குற்றவாளிகள் அவர்களோடு சேரும் போது தொடர் குற்றங்களில் ஈடுபட்டு மிகப்பெரும் சமூகவிரோதிகளாக மாறுகின்றனர். எனவே, அனைத்து மாவட்ட சிறைகளுக்கும் முதல் முறையாக கைது செய்யப்பட்டு வரும் இளம் குற்றவாளிகளைத் தனித்து வைத்து நெறிப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

தேவநேயன்
தேவநேயன்

சமூக செயற்பாட்டாளரும், தோழமை அமைப்பின் இயக்குநருமான தேவநேயனிடம் கேட்டபோது, "பத்து ஆண்டுகளாக தேசிய குற்றப்பதிவு ஆவண அறிக்கையின்படி குழந்தைகளுக்கான குற்றங்கள் அதிகரித்ததுபோலவே, குழந்தைகளால் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று அதிர்ச்சி தகவலும் வெளிப்பட்டுள்ளது. குடும்பம், சமூகம், அரசு இணைந்து செயல்பட்டால் தான் இந்த எண்ணிக்கையைக் குறைக்க முடியும். குழந்தைகள் நலன் சார்ந்து தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு கொண்டு வந்த அருகாமை குழந்தைகள் பாதுகாப்புக்குழு திட்டம் சிறப்பான நடவடிக்கையாகும். இக்குழுக்களை தமிழகம் முழுவதும் விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் இளம் குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்க முடியும். அத்துடன் அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை உடனடியாக உணர்ந்து அவர்களுக்குரிய ஆலோசனை வழங்க வேண்டும். இதன் மூலம் மாணவ பருவ குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்க முடியும். மேலும் பாலியல் குறித்த புரிதலை ஆண், பெண் பேதமின்றி சொல்லித்தர வேண்டும். அப்படி செய்வதன் மூலம் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சிறார்களின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்க முடியம்" என்று கூறினார்.

இ.இராபர்ட் சந்திரகுமார்
இ.இராபர்ட் சந்திரகுமார்

உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் இ.இராபர்ட் சந்திரகுமாரிடம் கேட்டதற்கு, " ஆண், பெண் சமத்துவமின்மை தான் இளம் குற்றவாளிகள் அதிகரிக்க காரணம். வீடுகளில் பெண் குழந்தைகளுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது இப்பிரச்சினை துவங்குகிறது. பெண் என்பவள் பலகீனமானவள் என்ற உடல் சார்ந்து பார்க்கும் எண்ணம் விதைக்கும் இடமாக வீடுகள் உள்ளன. இதன் காரணமாக பெண்கள் மீதான ஆண்களின் பார்வை மாறுபடுகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளுக்கு இந்த எண்ணம் தான் மேலோங்குகிறது. எனவே, சமூகம், கல்வி நிலையம், வீடு என்ற அமைப்பு முறையில் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அவர்களுக்கு பெண்கள் குறித்த புரிதலை முதலில் உருவாக்க வேண்டும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in