‘தற்கொலை செய்யப்போகிறோம்’: காதல் ஜோடி அனுப்பிய மெசேஜால் பதறிய பெற்றோர்!

‘தற்கொலை செய்யப்போகிறோம்’: காதல் ஜோடி அனுப்பிய மெசேஜால் பதறிய பெற்றோர்!

தற்கொலை செய்யப்போகிறோம் என்று பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி விட்டு காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அங்கேரிபாளையத்தை அடுத்த ஆத்துப்பாளையம் சாலையில் உள்ள கிணற்றில் இளம்பெண் உடல் நேற்று மிதந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் செட்டிப்பாளையம் விஏஓ ரவிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அளித்த புகாரின் பேரில், அனுப்பர்பாளையம் போலீஸார், தீயணைப்புதுறையினர் உதவியுடன் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இளம்பெண் இறந்த கிணற்றில் மற்றொரு ஜோடி காலணியும் மிதந்தது. அத்துடன் கிணற்றின் அருகில் டூவீலரும் இருந்தது. இதனால், இளம்பெண்ணுடன் வேறு யாரும் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் கிணற்றில் மீண்டும் தேடிய போது, ஆண் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது பேண்ட்டில் இருந்த செல்போன் இருந்தது. அந்த சிம்கார்டு மற்றும் டூவீலரை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர் திருப்பூரை அடுத்த அவினாசி கைகாட்டி புதூர்பகுதியைச் சேர்ந்த முரளி மகன் அஜய்(23) எனத் தெரிய வந்தது. அவரும், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இதையறிந்த இரண்டு வீட்டிலும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அஜித்திற்கு செல்போனில் குறுஞ்செய்தியை மாணவி அனுப்பியுள்ளார். அதில், வீட்டில் பெற்றோர் திட்டுவதால் வாழப் பிடிக்கவில்லை என்றும், என்னை அழைத்து சென்றுவிடு என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அஜய் மாணவியை நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்றுள்ளார். இதனால் இருவீட்டிலும் பெற்றோர் பதற்றத்துடன் அவர்களைத் தேடியுள்ளனர்.

இதன் பின் அவர்கள் இருவரும் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாக பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in