விஸ்வரூபமெடுத்த தற்கொலை பிரச்சினை: ராஜினாமா செய்கிறார் ஈஸ்வரப்பா

அமைச்சர் ஈஸ்வரப்பா
அமைச்சர் ஈஸ்வரப்பா

ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் சந்தோஷ் பாட்டீல் (40). இவர், அரசு திட்டங்களின் ஒப்பந்ததாரராக இருந்தார். பாஜக உறுப்பினரான இவர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தன்னிடம் அரசின் ஒப்பந்த பணி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க 40 சதவீத கமிஷன் கேட்டதாக , பிரதமர் மோடிக்கும், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பினார்.

தற்கொலை செய்து கொண்ட ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல்.
தற்கொலை செய்து கொண்ட ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல்.

இதனால் அவர் மீது ஈஸ்வரப்பா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் உடுப்பியில் உள்ள விடுதியில் மர்மமான முறையில் சந்தோஷ் பாட்டீல் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக, சந்தோஷ் பாட்டீல் தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தியில், தன் மரணத்துக்கு அமைச்சர் ஈஸ்வரப்பா மட்டுமே காரணம் என்று குறிப்பிட்டதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சந்தோஷ் பாட்டீலின் சகோதரர் பிரஷாந்த் அளித்த புகாரின்படி, அமைச்சர் ஈஸ்வரப்பா, அவரது உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே ஈஸ்வரப்பாவை பதவியில் இருந்து நீக்க கோரி காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை ஈஸ்வரப்பா மறுத்தார். ஆனால், உள்கட்சியிலேயே அவருக்கு நெருக்கடி வலுத்துள்ள நிலையில், தனது அமைச்சர் பதவியை ஈஸ்வரப்பா ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் நாளை வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in