கேரளத்தை உலுக்கிய விஸ்மயா தற்கொலை... கணவர் குற்றவாளி எனத் தீர்ப்பு: நாளை தண்டனை அறிவிப்பு

கேரளத்தை உலுக்கிய விஸ்மயா தற்கொலை... கணவர் குற்றவாளி எனத் தீர்ப்பு: நாளை தண்டனை அறிவிப்பு
விஸ்மயா

ஒட்டுமொத்த கேரளத்தையே இளம்பெண் விஸ்மயா மரணம் உலுக்கியிருந்தது. 22 வயதே ஆன பட்டதாரிப்பெண் விஸ்மயா வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பான வழக்கில் அவரது கணவர் கிரண்குமார் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கிரண்குமார்
கிரண்குமார்

கேரள மாநிலம், கொல்லம் அருகே சாஸ்தாங்கோட்டைப் பகுதியில் கணவர் வீட்டில் நடந்த இளம்பெண் விஸ்மயாவின் தற்கொலை தீராத ரணத்தை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினையைத் தொடர்ந்து கேரளத்தில் தலைதூக்கியிருக்கும் வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிராக ஆளுநர் ஆரிப் முகமதுகானே உண்ணாவிரதம் இருந்தார். விஸ்மயாவுக்கும், கேரள மோட்டார் வாகனத்துறையில் உதவி மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிய கிரண்குமாருக்கும் திருமணம் முடிந்து ஓராண்டுகளே ஆகியிருந்தது. கிரண்குமாரோடு ஒப்பிடுகையில் துளியும் அழகிலோ, கல்வியிலோ விஸ்மயா குறைந்தவர் இல்லை. ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு படித்து வந்தார் விஸ்மயா.

விஸ்மயாவை திருமணம் செய்துகொடுக்கும்போதே கிரண்குமாருக்கு ஒன்றேகால் ஏக்கர் நிலம், 100 சவரன் நகைகள், பத்துலட்ச ரூபாயில் கார் என வரதட்சணையாக வாரி இறைத்தனர் விஸ்மயாவின் பெற்றோர். இதில் வரதட்சணையாகத் தனக்குத்தந்த கார் பிடிக்கவில்லை எனவும், அதற்குப்பதிலாக ரொக்கப் பணமாக வேண்டும் எனவும் வரதட்சணை கொடுமை செய்யத் தொடங்கினார் கிரண்குமார். ஒருகட்டத்தில் வரதட்சணைக் கொடுமையைத் தாங்கமுடியாமல் விஸ்மயா தன் கணவரின் இல்லத்தில் இருக்கும் குளியலறையிலேயே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தன் கணவரால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி சிதைந்துபோன தனது முகம் மற்றும் உடல்பகுதிகளை உறவினர்கள் சிலருக்கு விஸ்மயா வாட்ஸ் அப்பில் அனுப்பிவைத்திருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதே, ஒட்டுமொத்தக் கேரளத்தையும் விஸ்மயா விவகாரத்தைப் பேச வைத்தது. இதேபோல் அவரது தந்தை திரிவிரிகாமன் நாயரிடம், விஸ்மயா இனியும் இந்த வீட்டில் இருக்கமுடியாது என்றும், தான் எப்படியெல்லாம் வரதட்சணைக் கொடுமைக்கு உள்ளாகிறேன் என்பது குறித்து அழுதுகொண்டே பேசும் ஆடியோவும் வைரல் ஆனது.

விஸ்மயாவின் மரணத்தின் பின்பு அரசு ஊழியர் என்பதாலேயே கிரண்குமார் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததும் தெரியவந்தது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதமே கிரண்குமாரை அரசுபணியில் இருந்து நீக்கியது கேரள அரசு. இந்த விவகாரத்திற்குப் பின்புதான், கேரளத்தில் அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்க மாட்டோம் என தங்கள் உயர் அதிகாரிகளுக்கு சுய ஒப்புதல் கொடுக்கும் திட்டமும் வந்தது.

விஸ்மயா இறந்து ஒரு ஆண்டு ஆவதற்குள்ளாகவே இதுதொடர்பான வழக்கில் அதிரடி தீர்ப்பு ஒன்றைக் கொடுத்துள்ளது கொல்லம் நீதிமன்றம். கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.என்.சுஜித் இன்று அளித்த தீர்ப்பில், “இந்திய தண்டனைச் சட்டத்தின் 306-வது பிரிவு தற்கொலைக்குத் தூண்டுதல், 498 ஏ, கணவர் அல்லது உறவினரால் பெண் கொடுமைக்குள்ளாதல், 506 ஆகிய பிரிவுகளின்கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் கேரள அரசு, 500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இவ்வழக்கில் 42 பேர் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் காவல் துறையால் 102 ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன. குற்றவாளி என தீர்ப்பு கொடுத்த நீதிபதி கே.என்.சுஜித் தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் பத்தாண்டுகள் முதல் ஆயுள்தண்டனை வரை கிரண்குமாருக்கு விதிக்கப்படும் வாய்ப்பிருப்பதாக சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in