ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை: 2 காவல் துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது தேர்தல் ஆணையம்!

காவல் துறையினர் மீது நடவடிக்கை
காவல் துறையினர் மீது நடவடிக்கை

மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தின்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த விவகாரத்தில் 2 காவல் துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ராம நவமியை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த 17ம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு அசம்பாவிதம் நிகழ்ந்தது. இதில் ஒரு பெண் படுகாயமடைந்தார். இதேபோல், முர்ஷிதாபாத் மாவட்டத்திலேயே மற்றொரு இடத்தில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முர்ஷிதாபாத்தில் ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை
முர்ஷிதாபாத்தில் ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை

இந்த வன்முறை சம்பவங்களால் அம்மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ராம நவமி ஊர்வலத்தில் நடந்த அசம்பாவித சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்ததாக காவல் துறையைச் சேர்ந்த இரண்டு பொறுப்பு அதிகாரிகளை, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணைய தகவல் படி, சக்திபூர், பெல்டங்கா காவல் நிலையங்களின் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகளும் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் இருப்பார்கள்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

அவர்கள் தேர்தல் தொடர்பான எந்த பணிகளையும் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்” என்றனர். தேர்தல் பணிக்கு இவர்கள் இருவருக்கான மாற்று காவல் துறை அதிகாரிகளின் பெயர்களை அனுப்புமாறு அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in