துரத்தும் சொத்துக்குவிப்பு வழக்கு... இன்று நேரில் ஆஜராகிறார் விஜயபாஸ்கர்!

சி.விஜயபாஸ்கர்
சி.விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா இருவரும் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயபாஸ்கர் மனைவி ரம்யா
விஜயபாஸ்கர் மனைவி ரம்யா

அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் டாக்டர் விஜயபாஸ்கர். முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான இவர் தற்போது விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் 35.79 கோடி ரூபாயை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் இருந்தது.

அதன்படி கடந்த 2021 அக்டோபர் 17-ம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை இலுப்பூரில் அமைந்துள்ள விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வீடு, கல் குவாரிகள், சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் தொடர்புடைய 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அங்கே 210 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையும் மே மாதம் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

கடந்த முறை இந்த வழக்கு செப் 26-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இருப்பினும், அப்போது விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல்களில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளதாகவும் அதை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை முழுமையாக விஜயபாஸ்கர் தரப்புக்கு வழங்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றம், வழக்கை ஒத்தி வைத்தது. அதன்படி இந்த வழக்கு கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இருப்பினும், அப்போது மனைவி ரம்யா ஆஜராகவில்லை. மேலும், ஏற்கெனவே குற்றப்பத்திரிக்கை நகல்கள் விஜயபாஸ்கர் தரப்புக்கு வழங்கப்பட்ட நிலையில், விடுபட்ட பக்கங்களைச் சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவகாசம் கோரினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in