பள்ளி மாணவன் கார் ஓட்டியதால் விபரீதம்... சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்து; ஒருவர் பலி

கார் விபத்து
கார் விபத்து

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டிச் சென்ற கார் மேம்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி, 4 பேர் காயமடைந்தனர்.

ஏலகிரி மலைப்பாதை
ஏலகிரி மலைப்பாதை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ளது ஏலகிரி. சுற்றுலா மையமான இங்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து தங்கிச் செல்கின்றனர். இந்த பகுதியில் உள்ள இயற்கை அழகையும், படகு குழாமில் விளையாடியும் மகிழ்ந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்றும், இன்றும் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால், பலர் சுற்றுலாவுக்காக ஏலகிரிக்குப் படையெடுத்துள்ளனர். அதேபோல், ஆம்பூர் நூருல்லா பேட்டை மற்றும் ஜலால் பேட்டையைச் சேர்ந்த 5 மாணவர்கள் ஏலகிரிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். இதில் 4 பேர் 10ம் வகுப்பும், 1 மாணவன் 11ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

கார் விபத்து
கார் விபத்து

இதில் 11ம் வகுப்பு மாணவன் காரை ஓட்டிச்சென்றுள்ளார். நேற்று ஒருநாள் முழுவதும் ஏலகிரியைச் சுற்றிப்பார்த்த அவர்கள் இன்று மீண்டும் ஊர் திரும்பினர். அப்போது, கார் வாணியம்பாடி அடுத்த வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால், சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மேம்பாலம் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த 10ம் வகுப்பு மாணவன் அதனான் என்பவர் சம்பவ இடத்தில் பலியானார். படுகாயம் அடைந்த ராஷித்(17), ஈஹான்(16), தக்வீம்(16),தல்ஹா(16) ஆகிய 4 மாணவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாணியம்பாடி காவல் நிலையம்
வாணியம்பாடி காவல் நிலையம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி நகர போலீஸார் விபத்தில் பலியான மாணவன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in