அதிர்ச்சி... பெண் போலீஸை தர தரவென வேனில் இழுத்துச் சென்ற டிரைவர்!

பெண் போலீஸார்.
பெண் போலீஸார்.

போக்குவரத்துக்கு இடையூறு செய்த வேன் டிரைவரை தட்டிக் கேட்ட போக்குவரத்து பெண் காவலரை  வேனில் தரதரவென  வேன் டிரைவர் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னையை அடுத்த கானத்தூர் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து காவலராக வேலை பார்த்து வருபவர் ஜீவா (34). இவர் நேற்று முன்தினம் இரவு கேளம்பாக்கம் வீராணம் சாலையில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக புதுப்பாக்கத்தில் இருந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று திருப்போரூர் நோக்கிச் சென்றது. 

இந்த வேனை மானாம்பதியை சேர்ந்த டிரைவர் பெருமாள் ஓட்டினார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வேன் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் வேன் டிரைவர் பெருமாள் தொடர்ச்சியாக ஹாரன் அடித்துள்ளார். இதனால் பெண் போலீஸ் ஜீவா அவரிடம் வந்து  இதைத் தட்டிக் கேட்டார். 

ஆனாலும், பெருமாள் தொடர்ந்து ஹாரன் அடித்தார். அதை ஜீவா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள்,  ஜீவா மீது மோதுவது போல் வேனை ஓட்டி அவர் மீது உரசியபடி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவா வேனுக்குள் ஏற முயன்றார். வேனின் படிக்கட்டை பிடித்து அவர் தொங்கிய நிலையில் இருந்தபோது  பெருமாள் வேனை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். இதனால்  ஜீவா தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை வேனின் குறுக்கே நிறுத்தி  ஜீவாவை மீட்டனர். பின்னர் கேளம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீஸார், காயமடைந்த பெண் போலீஸ் ஜீவாவை சிகிச்சைக்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கைது
கைது

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் பெருமாளை கைது செய்தனர். வேனையும் பறிமுதல் செய்து டிரைவர் பெருமாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸை வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in