பெண் தளபதி உட்பட 5 நக்சல்கள் கைது; தீவிரவாத எதிர்ப்பு பிரிவு அதிரடி!

பயிற்சி களத்தில் நக்சல்கள்
பயிற்சி களத்தில் நக்சல்கள்

உத்தரபிரதேச மாநிலத்தின் பசந்த்பூர் கிராமத்தில் பதுங்கியிருந்த 5 நக்சல்களை மாநில பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பாலியாவின் சஹத்வார் காவல் நிலையப் பகுதியில் உள்ள பசந்த்பூர் கிராமத்தில் நக்சல்கள் சிலர் பதுங்கியிருப்பதாக, உத்தரபிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் நக்சல்கள் அமைப்பின் 2 முக்கியஸ்தர்கள் உட்பட 5 நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிஸ்ட் பிரிவைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் சார்பில் செயல்பட்டு வரும் ஐவரும் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் வசமிருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நக்சல் சித்தாந்தத்தை பரப்பும் கொள்கை கோட்பாடுகள் அடங்கிய டிஜிட்டல் ஆவணங்களும் இவற்றில் அடங்கும்.

கைதானவர்களில் மஞ்சு என்கிற தாரா தேவி முக்கியமானவர். இவர் நக்சலைட் அமைப்பின் பெண்கள் பிரிவின் தளபதியாக செயல்பட்டு வருபவர். சுமார் 18 ஆண்டுகளாக அந்த அமைப்பில் தீவிரமாக பங்களித்து வரும் தாரா தேவி, பீகார் மாநிலத்தின் மதுபன் வங்கி கொள்ளை வழக்கு உட்பட முக்கிய சட்டவிரோத நடவடிக்கைகளில் தேடப்பட்டு வருபவர்.

கைதானவர்களில் இன்னொரு முக்கியஸ்தர் சத்யபிரகாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நக்சலைட் அமைப்பின் சித்தாந்தத்தை பரப்பியதிலும், விவசாயிகளுக்கான பிரத்யேக நக்சலைட் கிளை அமைப்பை உருவாக்கிய வகையிலும் முக்கியமானவர் ஆவார். தாரா தேவி, சத்ய பிரகாஷ் மற்றும் இதர நக்சல்கள், உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் மண்டலத்தில் நக்சல் கூட்டமைப்பு ஒன்றினை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

அவர்களின் நகர்வுகளை கண்காணித்து வந்த பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர், ஒரே இடத்தில் நக்சல் முக்கியத் தலைவர்கள் கூடுவதாக கிடைத்த தகவலை அடுத்து அவர்களை அதிரடியாக மடக்கி கைது செய்துள்ளனர். வட மற்றும் மத்திய இந்தியாவில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் முக்கியமானதாக இது கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in