பேரதிர்ச்சி; ஜாமீனில் வந்து பாலியல் புகாரளித்த பெண்ணை வெட்டிக்கொன்ற சகோதரர்கள்

பேரதிர்ச்சி; ஜாமீனில் வந்து பாலியல் புகாரளித்த பெண்ணை வெட்டிக்கொன்ற சகோதரர்கள்

உத்தரபிரதேசத்தில் ஜாமீனில் வெளியே வந்த அண்ணன், தம்பி சேர்ந்து, பாலியல் புகார் அளித்த பெண்ணை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கௌசம்பி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பவன் நிஷாத் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பவன் நிஷாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதேபோல் இவரது சகோதரர் அசோக் என்பவரும் வேறொரு கொலை வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

காவல்துறை விசாரணை
காவல்துறை விசாரணை

இதையடுத்து அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற பவன் மற்றும் அசோக், வழக்கை வாபஸ் பெறுமாறு பெண்ணை மிரட்டியுள்ளனர். ஆனால் இதற்கு அந்தப் பெண்ணும் குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பவன் மற்றும் அசோக் ஆகியோர், புகார் அளித்த பெண்ணை சாலையில் வைத்து பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்த தகவல் அறிந்த உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சமர் பகதூர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடைய இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டத்தின் மீது குற்றவாளிகளுக்கு எவ்வித அச்சமும், மரியாதையும் இல்லாத சூழல் நிலவி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் உ.பி மாநில பெண்கள், தாங்கள் இழந்த மரியாதையை திரும்ப பெற முயன்றால் அதற்காக உயிரையும் இழக்க நேரிட வேண்டி இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in