மதுரை தம்பதியின் உயிரைப் பறித்தது உக்ரைன் போர்

பங்குச்சந்தை வீழ்ச்சியால் எடுத்த விபரீத முடிவு
நாகராஜன், லாவண்யா
நாகராஜன், லாவண்யா

உக்ரைன் போரால் ஏற்பட்ட பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக மதுரையைச் சேர்ந்த கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழைய குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (46). பங்குச்சந்தை ஆலோசகர். இவரது மனைவி லாவண்யா (34). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. பங்குச்சந்தையில் பல லட்சக்கணக்கான ரூபாய் நாகராஜன் முதலீடு செய்திருந்தார். இதற்காக பலரிடம் லட்சக்கணக்கான ரூபாயை நாகராஜன் அதிக வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக உலகம் முழுவதும் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த நாகராஜனுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான மனஉளைச்சலில் அவர் இருந்துள்ளார். நேற்று குழந்தைகளை டியூசனில் விட்டு வந்தவர் அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரவில்லை. இதனால் டியூசன் நடத்துபவர் குழந்தைகளை அழைத்து வந்துள்ளார். வழியில் லாவண்யாவின் சகோதரி ஸ்ரீதேவி, குழந்தைகளை தான் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். அவர் குழந்தைகளோடு வீட்டிற்குச் சென்ற போது நாகராஜன், லாவண்யா இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்த தகவலறிந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் அடைந்ததால் நாகராஜன், அவரது மனைவியோடு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். உக்ரைன் போரால் ஏற்பட்ட பங்குச்சந்தை வீழ்ச்சி, மதுரையில் இருவரின் உயிரைப்பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in