பிரசவ வார்டுகளை குறிவைத்து திருட்டு: பெண்ணை கையும் களவுமாக பிடித்த பெண் காவலாளிகள்

பிரசவ வார்டுகளை குறிவைத்து திருட்டு: பெண்ணை கையும் களவுமாக பிடித்த பெண் காவலாளிகள்
திருட்டில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து கொடுத்த பெண்களை பாராட்டும் தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரசவ வார்டில் கர்ப்பிணிப் பெண்களின் நகைகளைத் திருடிய பெண்ணை கையும் களவுமாகப் பிடித்த தனியார் நிறுவன பெண் காவலாளிகளை, காவல்துறை மற்றும் மருத்துவமனை முதல்வர் நேரில் அழைத்துப் பாராட்டினர்.

மதுரை மாவட்டம், கடச்சநேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு. சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் நிறுவன ஒப்பந்த பாதுகாவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பிரசவ வார்டில் சந்தேகத்திற்கிடமாக பெண் ஒருவர் சுற்றிவந்துள்ளார். இதனைக்கண்ட பணியாளர்கள் மஞ்சு மற்றும் லட்சுமி ஆகியோர், அப்பெண்ணைப் பிடித்து மருத்துவமனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அப்பெண் மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த நிவேதா என்றும் அவர் பிரசவ வார்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களின் நகைகளைத் திருடியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே திருட்டில் ஈடுபட்ட பெண்ணை கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்த பெண் பணியாளர்களை தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் நேரில் அழைத்துப் பாராட்டினார். மேலும், அரசு மருத்துவமனையில் முதல்வர் ரத்தினவேலும் அவர்களைப் பாராட்டினார்.

Related Stories

No stories found.