
தஞ்சாவூர் அருகே, சாம்பார், சட்னி அதிகமாக ஊற்றியதால் ஏற்பட்ட தகராறில், சாம்பார் வாளியால் அடித்ததில் ஓட்டல் உரிமையாளருக்கு மண்டை உடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பட்டுக்கோட்டை - தஞ்சை பிரதான சாலையில், குரும்பன் தெரு என்ற இடத்தில் வள்ளுவர் குடிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கவாஸ்கர், அவரது நண்பர் திராவிட மணி ஆகியோர் இணைந்து ஓட்டல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது ஓட்டலுக்கு பூவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் (37), அவரது நண்பர் மகேந்திரன் (45) ஆகியோர் சாப்பிட வந்துள்ளனர். டிபன் பரிமாறும் போது சட்னி, சாம்பார் அதிகமாக ஊற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அருண், மகேந்திரன் ஆகிய இருவரும் கவாஸ்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சாம்பார் வாளியால் கவாஸ்கரின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த கவாஸ்கர் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அருண், மகேந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.