
காரைக்குடியில் இருசக்கர வாகனத்தின் மீது காரை விட்டு மோதியதைத் தட்டிக் கேட்டவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தில் மேலும் இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அண்ணா நகரை சேர்ந்தவர் திருக்குமார் (22). இவர், நேற்று கழனிவாசல் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தேவகோட்டையை சேர்ந்த வைரவன் (36), ராஜேஷ் (37) ஆகியோர் உள்ளிட்ட சிலர் காரில் வந்துள்ளனர். சாலை வளைவில் திரும்பும்போது கார், திருக்குமார் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காரில் வந்தவர்கள், திருக்குமாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து திருக்குமார், தனது அண்ணன் திருமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த திருமூர்த்தி உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த வைரவன், ராஜேஷ் உள்ளிட்டவர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர், மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து திருமூர்த்தியை நோக்கி காட்டி மிரட்டிவிட்டு பின்னர் தரையில் சுட்டுள்ளார். இதனால் அந்த உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அங்கு கூடிய அப்பகுதி பொதுமக்கள், வைரவனும் ராஜேஷும் துப்பாக்கியை காட்டி மிரட்டியதைக் கேட்டு ஆத்திரமடைந்தனர். அவர்களின் காரை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். மக்கள் கூடியதால் காரில் வந்தவர்கள் துப்பாக்கியை புதருக்குள் தூக்கி வீசிவிட்டு நிராயுதபாணியாக நின்றனர். இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற காரைக்குடி வடக்கு போலீஸார் இருவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அத்துடன் அவர்கள் தூக்கி எறிந்த கைத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
உரிய உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்தனரா? சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய பிரசாத் (26) மற்றும் மணிகண்டன் என்ற சங்கர் (26) ஆகிய இருவரை நேற்று இரவு கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கைத் துப்பாக்கி, நாட்டு துப்பாக்கி, வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக சென்று விசாரணையை கண்காணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.