சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருவர் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்ப முயன்றபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் தங்கியிருந்து வண்ணம் பூசும் வேலைகளைச் செய்து வந்தனர். நேற்றுடன் அவர்கள் செய்துவந்த பணிகள் முடிவடைந்த நிலையில், 4 தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக முடிவு செய்தனர். அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு மின்சார ரயிலை பிடிப்பதற்காக நேற்று இரவு பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
அங்கு மின்சார ரயிலுக்காக அவர்கள் காத்திருந்தனர். அப்போது தொழிலாளர்கள் சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரும் நடைமேடையை விட்டு இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அந்த வழியாக வேகமாக வந்த சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இருவர் மீதும் மோதியது. இதில் அவர்கள் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து பொன்னேரி ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்த போலீஸார், ரயில் மோதி உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொந்த ஊர் செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்த தொழிலாளர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.