மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை: அரசு மருத்துவர்கள் கைது!

மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை: அரசு மருத்துவர்கள் கைது!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் ஆகியோர் சக பெண் மருத்துவர்கள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளது அரசு மருத்துவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சுழற்சிமுறையில் பணியை மேற்கொள்ள, சுகாதாரத் துறை சார்பில் தனியார் விடுதிகளில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி சென்னை தி.நகரில் உள்ள விடுதியில் மருத்துவர் வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் ஆகியோர் தங்கியிருந்தனர். அதே மருத்துவமனையில் பணியாற்றிய இரு பெண் மருத்துவர்களும் அதே விடுதியில் தங்கிவந்தனர்.

அந்த சமயத்தில் வெற்றிச்செல்வன் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மோகன்ராஜ் இன்னொரு பெண் மருத்துவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜனிடம் முறையிட்டனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி தேரணிராஜன் தி.நகர் காவல் துணை ஆணையர் ஹரிகிரன் பிரசாத்திடம் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in