`வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொன்றோம்'- கைதான வடமாநில இளைஞர்கள் வாக்குமூலம்

`வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொன்றோம்'- கைதான வடமாநில இளைஞர்கள் வாக்குமூலம்
கைதான இருவர்

மீனவப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 2 வட மாநில இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் கடந்த 24-ம் தேதி இரவு வடகாடு கடற்கரை பகுதியில் பாசி சேகரிக்க சென்ற சந்திரா (45) என்ற மீனவப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. காவல் துறையினர் விசாரணையில் அருகில் உள்ள இறால் பண்ணையில் பணியாற்றிய வட மாநில இளைஞர்கள் தான் இதனை செய்திருக்கலாம் என்று தெரிய வந்த நிலையில் ஆத்திரமடைந்த வடகாடு பகுதி மீனவர்கள் அருகில் இருந்த இறால் பண்ணைக்குள் நுழைந்து தீ வைத்ததுடன் பொருட்களை அடித்து, உடைத்து சேதப்படுத்தினர். மேலும், அங்கிருந்த வட மாநில இளைஞர்கள் 6 பேர் மீதும் தாக்குதல் நடத்தினர்.

தொடர்ந்து, மறுநாள் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், கிராம மக்கள் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீனவப் பெண்ணுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு டயர்களை எரித்ததால் வாகனப் போக்குவரத்து ஐந்தரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்டவரின் கணவர் ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இறால் பண்ணையில் பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் ரானா (34), ராகேஷ் (25), விகாஸ் (24), பிரகாஷ் (22), பிரசாத் (18), பின்டு (18) ஆகிய இளைஞர்களை மண்டபம் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் ரானா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவர் மீனவப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும், அவர் அணிந்திருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருளை கொள்ளையடித்து அதனை ராமேஸ்வரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் விற்பனை செய்து ஒடிசாவுக்கு தப்பி ஓடுவதற்காக ரயிலில் செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ததும் தெரிய வந்தது.

மேலும், உடற்கூறாய்வில் மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரஞ்சன் ரானா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 4 வட மாநில இளைஞர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்பதால், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் மீதும் ராமேஸ்வரம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in