திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கீரம்பூர் காந்திநகர் காலனியை சேர்ந்த பெருமாள் மனைவி ராசாத்தி (45). இவருக்கு நந்தகுமார் (25), கார்த்திக் (22) என்கிற 2 மகன்கள் உள்ளனர். இதில் கார்த்திக் அடிவாரம் பகுதியில் இயங்கி வந்த பார் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த பாரை அதே பகுதியை சேர்ந்த வினோத் என்கிற பன்றி வினோத் லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் இருந்து சென்னைக்கு வேலைக்கு சென்ற கார்த்திக் அதன் பிறகு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அவரை காணாத ராசாத்தி விசாரித்ததில் மகன் கார்த்திக் பெரம்பலூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்ததும், இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினையை காரணமாக பிரிந்துவிட்டதும் தெரியவந்தது. இதனால், மனம் வெறுத்துப்போன கார்த்திக் சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராசாத்தி தனது மகன் கார்த்திக் வீட்டிற்கு வராததால் வினோத்தின் (40) உதவியுடன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே, வினோத் மற்றும் காணாமல் போன கார்த்திக்கின் சகோதரரான நந்தகுமார் ஆகிய 2 பேரும், அடிவாரப் பகுதியை சேர்ந்த விஜய் (24) என்பவரிடம் கார்த்திக்கை பற்றி பாரில் வைத்து விசாரித்துள்ளனர். அப்பொழுது விஜய்க்கும், வினோத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பானது. அப்பொழுது வினோத் அருகில் இருந்த கட்டையை எடுத்து தாக்கியதில், தலையில் பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து வினோத் மற்றும் நந்தகுமார் ஆகிய 2 பேரும், விஜயின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து, பச்சை மலையில் உள்ள தாளூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோட்டத்தில் புதைத்தனர். இதனைத் தொடர்ந்து தோட்டத்து உரிமையாளரான ஜெயராமன் சந்தேகம் அடைந்து துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
மேலும், அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வட்டாட்சியர் வனஜா ஆகியோர் கொண்ட குழுவினர் தொழிலாளர்கள் உதவியுடன் தோண்டி பார்த்ததில் ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அது விஜய் என்றும், கொன்று புதைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து வினோத், நந்தகுமார் ஆகிய 2 பேரும் துறையூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விரைவாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் விஜய்யை கொலை செய்யும் பொழுது, வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (27), அடிவாரப் பகுதியை சேர்ந்த சிவா (31) மற்றும் காணாமல் போன கார்த்திக்கின் தாயார் ராசாத்தி (42) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்தில் இருந்ததும், கொலை செய்த பிறகு உடலை மறைக்க உதவி செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து 3 பேரையும் துறையூர் போலீஸார் தேடி வந்தனர். இதையடுத்து அவர்கள் கீரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணனிடம் சரணடைந்தனர். அவர்கள் 3 பேரையும் துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த துறையூர் போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!
வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஐயப்பனுக்கு தங்க அங்கி.. சபரிமலையில் இன்று நடை திறப்பு!
செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!