
இரண்டு பெண்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் நகை, பணம் திருடி ரூ.3 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருப்பது விசாரணையில் ஈடுபட்ட போலீஸாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கோவத்தகுடியைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மனைவி அன்னபூரணி (75). இவர் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு செல்வதற்காக மண்ணச்சநல்லூரில் இருந்து பேருந்தில் சென்றார். சமயபுரம் சந்தை பேட்டை பேருந்து நிறுத்தம் வந்ததும் அவர் கீழே இறங்கிய போது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை காணாமல் அதிர்ச்சியடைந்தார். உடனே, பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது, தான் பயணம் செய்த பேருந்தில் அருகில் சந்தேகப்படும்படி இரண்டு பெண்கள் நின்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து, லால்குடி துணை கண்காணிப்பார் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. அப்போது, சமயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற இரண்டு பெண்களை தனிப்படையினர் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (43 ), சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி சேர்ந்த ரேகா என்கிற கல்பனா(43) என்பது தெரிய வந்தது.
பின்னர் காளியம்மாளின் செல்போனை சோதனை செய்த போது அவர்கள் ஒரு இடத்தில் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக தங்கவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அன்னபூரணியின் செயினை திருடியதை உறுதி செய்தனர். இவர்கள் இரண்டு பேரும் கடந்த 15 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சரவணன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கோவை, பழனி, திருச்சி, திருவண்ணாமலை, சென்னை, திருவாரூர் , செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், பெங்களூரு, மேட்டுப்பாளையம், வேளாங்கண்ணி, சித்தூர், காலகஸ்தி, திருப்பதி, மும்பை, புனே, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் ரேகா மற்றும் காளியம்மாளிடம் காவல்துறையினர், அன்னபூரணியிடம் திருடிய ஒன்றரை பவுன் செயின் மற்றும் வேறு பெண்களிடம் திருடிய 58 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி ரூ.26 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் நகை பணம் திருடி ரூ.3 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்திருப்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து பத்திர ஆவணங்கள் 2 செல்போன்கள் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
வழக்கமாக திருடும் நகைகளை அந்த பெண்கள் உடனடியாக விற்று ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்களிடம் கொடுத்து நிலங்களை வாங்கி குவித்துள்ளனர். இவ்வாறு ரூ.3 கோடிக்கு மேல் சொத்துக்களைச் சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காளியம்மாள் தனது மகளுக்கு சமயபுரத்தில் உள்ள மண்டபத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து ஆடம்பரமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ள தகவலும் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்ட காளியம்மாள் மற்றும் ரேகா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் திருச்சி சிறையில் அடைத்தனர்.