லட்சக்கணக்கில் மோசடி: ஏமாந்த பிரபல பாடகர் தேவன்

டிராவல் ஏஜென்சி மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்
லட்சக்கணக்கில் மோசடி: ஏமாந்த பிரபல பாடகர் தேவன்

குறைந்த விலையில் சொகுசு சுற்றுலா ஏற்பாடு செய்வதாக கூறி பிரபல சினிமா பாடகர் தேவன் உட்பட பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த‌ டிராவல் ஏஜென்சி மீது பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

`காதலர் தினம்' திரைப்படத்தில் `ஓ மரியா' என்ற பாடலை பாடி பிரபலமடைந்தவர் பாடகர் தேவன் ஏகாம்பரம். பண்முகம் கொண்ட இவர், பார்த்திபன் கனவு படத்தில் நடிகராகவும், விஷ்ணு விஷால் நடித்த `பலே பாண்டியா' திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பாடகர் தேவன் உள்ளிட்ட 10 பேர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய பாடகர் தேவன் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள், கர்மா ரிசார்ட் என்ற பெயரில் தனியார் டிராவல் ஏஜென்சி ஒன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனியார் நட்சத்திர ஓட்டல்களில் சொகுசு பார்ட்டி ஒன்றை நடத்தி தங்கள் செயல்பாடுகள் குறித்து விளம்பரம் செய்திருந்தனர். இதனை நம்பி மூன்று வருட உறுப்பினராக 45 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி இணைந்தோம். மேலும் இந்தியாவில் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல்களில் தங்கும் வசதிகளோடு கூடிய சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்து கொடுப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.

இதேபோல் இந்த நிறுவனத்தின் பல்வேறு பேக்கேஜ்களில் லட்சக்கணக்கான ரூபாய் செலுத்தி பலரும் உறுப்பினராகியுள்ளனர் என்றும் இந்தியாவிற்குள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சொகுசு சுற்றுலாப்பயணம் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி பணத்தை வசூலித்து உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் உறுப்பினர் என்ற அடிப்படையில் சுற்றுலா செல்வது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அணுகும்போது முறையாக பதிலளிக்காமல் அலைக்கழித்ததாக குற்றம்சாட்டினர்.

நாங்கள் கார் வாங்கிய டீலர்கள் மூலம் தகவல்களை பெற்று அதை வைத்து எங்களை தொடர்பு கொண்ட டிராவல் ஏஜென்சி ஊழியர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் பார்ட்டி கொடுப்பதாக கூறி அழைத்து விளம்பரம் செய்ததாக தெரிவித்தனர். தாங்கள் வாங்கிய கார்களின் விலைக்கு ஏற்றார்போல் பேக்கேஜ்களை பற்றி தெரிவித்து ஆசைவார்த்தை கூறி நூதன மோசடியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டனர்.

சம்பந்தப்பட்ட கர்மா ரிசார்ட் நிறுவனத்தை பற்றி கூகுளில் தேடிய போது பலரும் நல்ல கருத்துகளை பதிவிட்டதால் அதனை நம்பி பணத்தை செலுத்தியதாக கூறிய அவர்கள், ஏமாற்றத்திற்கு பின் விசாரணை செய்தபோது கேரளாவை சேர்ந்த கர்மா ரிசார்ட் என்ற பிரபல டிராவல்ஸ் நிறுவனத்தின் பெயரை மோசடியாக பயன்படுத்தி பலரையும் ஏமாற்றியது தெரியவந்தது என்றும் உண்மையான கர்மா ரிசார்ட் நிறுவனம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டதால் தற்போது valorah என்ற பெயரில் டிராவல் ஏஜென்சி செயல்படுவதாக தெரிவித்தனர்.

2,5,10 வருடம் என்ற பேக்கேஜில் 45 ஆயிரம் முதல் 5 லட்ச ரூபாய் வரை பணத்தை பெற்று உறுப்பினர்களாக சேர்த்து மோசடி செய்த இந்த நிறுவனத்தின் மேலாளர்கள் சிலரை கடந்த ஜனவரி மாதம் குஜராத் போலீஸார் கைது செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர்கள், சென்னை கீழ்பாக்கத்தில் நிறுவனத்தின் கிளை தொடர்ந்து செயல்படுவதாகவும், அதன் தென் மண்டல மேலாளர் எபினேசர் பால்ராஜ் உட்பட பல நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு காவல்துறையை கேட்டு கொண்டனர்.

காதலர் தினதன்று இந்நிறுவனம் ஏற்பாடு செய்த சுற்றுலாவுக்கு மனைவியுடன் ஊட்டிக்கு சென்றபோது மோசமான அறையில் தங்க வைத்து ஏமாற்றியதாகவும் சுற்றுலா பயண ஏற்பாடுகளை அவர்கள் பேக்கேஜில் தெரிவித்ததுபோல் நட்சத்திர ஓட்டல்களிலோ, சொகுசு விடுதிகளிலோ தங்க ஏற்பாடு செய்யாமல் மோசடி செய்ததாகவும் குறிப்பாகதான் ஒரு சினிமா பிரபலம் என்பதை பயன்படுத்தியும், வெளிநாடுகளில் சொந்த செலவில் பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்கி இருந்த போது எடுத்த என் புகைப்படத்தை சமூக வலைதளங்களின் இருந்து திருடி, அந்நிறுவனத்திற்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டதாகவும் பாடகர் தேவன் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in