டி.ராஜேந்தர் கார் மோதி முதியவர் உயிரிழப்பு: ஓட்டுநர் கைது

டி.ராஜேந்தர் கார் மோதி முதியவர் உயிரிழப்பு: ஓட்டுநர் கைது

நடிகர் டி.ராஜேந்தர் கார் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்று நாட்களுக்கு பிறகு சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல திரைப்பட நடிகர் டி.ராஜேந்தர் தனது மகள்வழி பேரனை கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் காண்பித்துவிட்டு, காரில் வீடு திரும்பினார். தேனாம்பேட்டை இளங்கோ சாலை சந்திப்பு அருகே கார் வரும் போது சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது டி.ராஜேந்தர் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

உடனே டி.ராஜேந்தர் விபத்தில் படுகாயமடைந்த முதியவரை 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து, அவரை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின் மற்றொரு காரை வரவழைத்து தனது பேரனுடன் டி.ராஜேந்தர் வீட்டுக்கு சென்றார். இந்த விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, விபத்து ஏற்படுத்திய கார் நடிகர் டி.ராஜேந்தரின் மகன் நடிகர் சிலம்பரசனுக்கு சொந்தமானது என்றும், காரை அவரது ஓட்டுநரான செல்வம் என்பவர் ஓட்டியதும் தெரியவந்தது. மேலும் கார் மோதி காயமடைந்த முதியவர் தேனாம்பேட்டை இளங்கோ நகரில் சாலையோரம் வசித்து வந்த முனுசாமி (62) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, கார் ஓட்டுநர் செல்வத்தை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது ஆபத்தாக முறையில் வாகனத்தை ஓட்டி காயத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் முனுசாமி சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே உயிரிழந்ததை அடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கை மாற்றி பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் டி.ராஜேந்தர் பயணித்த கார் மோதி முதியவர் விபத்துக்குள்ளான சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in