இறந்தவர்கள் பெயரில் கழிப்பறை: மெகா மோசடி செய்த ஊராட்சி செயலாளர் உள்பட 9 பேர் சிக்கினர்

இறந்தவர்கள் பெயரில் கழிப்பறை: மெகா மோசடி செய்த ஊராட்சி செயலாளர் உள்பட 9 பேர் சிக்கினர்

பாரத பிரதமர் இலவச கழிவறை திட்டத்தில் கழிவறை கட்டாமல், கட்டியதாக கணக்கு காண்பித்து அரசு பணத்தை கையாடல் செய்த ஊராட்சி செயலாளர் மற்றும் முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் பகுதியை சேர்ந்த பாண்டிகண்ணன் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், சிவகங்கை மாவட்டம் மறவமங்கல் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் பாரத பிரதமரின் இலவச கழிப்பறை திட்டத்தின் கீழ் கடந்த 2015-2019-ம் ஆண்டு வரையில் கழிவறை கட்டப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஒரே நபர் பெயரில் இரண்டு கழிப்பறைகள் கட்டியிருப்பதும், கணவன்- மனைவி என இருவர் பெயரில் இரண்டு கழிப்பறைகளை கட்ட அனுமதி வாங்கி ஒரு கழிப்பறை கட்டியிருப்பதும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், இறந்தவர்கள் பெயரிலும், திருமணமாகி வெளியூருக்கு சென்றவர்கள் பெயர் என, பல வகைகளில் மோசடி நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மறவமங்கலம் ஊராட்சியில் இத்திட்டத்தின் கீழ் 403 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டதாக கூறி பணம் பெற்று, 373 கழிப்பறைகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 30 கழிப்பறைகள் கட்டாமல் அரசு பணத்தை கையாடல் செய்துள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்டப்பட்டுள்ள பல கழிப்பறைகள் முழுமையாக கட்டப்படாமல் அரைகுறையாக கட்டியுள்ளதாகவும், மறவமங்கலம் ஊராட்சியின் பொது தகவல் அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் இது குறித்து விசாரிக்காமல் கையொப்பமிட்டதாகவும், இதற்கு உறுதுணையாக இருந்த மறவமங்கலம் ஊராட்சி எழுத்தர் முத்துக்கண்ணு ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து கையாடல் செய்த பணத்தை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் ஊராட்சி எழுத்தர் முத்துக்கண்ணு, முன்னாள் வளர்ச்சி துறை அலுவலர்கள் செல்வராஜ், ரமேஷ், அமலோற்பவம், சந்திரா, நசீரா பேகம், அன்புதுரை, இளங்கோ தாயுமானவர், இளங்கோ ஆகிய 9 பேர் மீது மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அடுத்தக்கட்டமாக 9 பேரிடமும் தனித்தனியாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in