இன்று பந்த்... வெறிச்சோடிய பெங்களூரு... களையிழந்த சாலைகள்; பொதுமக்கள் கடும் அவதி!

இன்று பந்த்... வெறிச்சோடிய பெங்களூரு... களையிழந்த சாலைகள்; பொதுமக்கள் கடும் அவதி!
Updated on
2 min read

இன்று பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைப்பெறுவதையொட்டி, பேருந்து, கார் போன்ற பொது போக்குவரத்துக்கான எந்த வாகனங்களும் இயங்காததால் பெங்களூரு நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளும் திறக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு ஐந்தாயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து கன்னட அமைப்பினர் மற்றும் விவசாயிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

தமிழ்நாட்டிற்கு ஐந்தாயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு செப்டம்பர் 13 முதல் தண்ணீர் திறக்க வேண்டுமென காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கன்னட அமைப்பினர் மற்றும் விவசாயிகள் அமைப்பு சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதே போன்று வரும் 29ம் தேதி கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்த உணவக உரிமையாளர்கள் சங்கம், திடீரென வாபஸ் பெற்றுள்ளனர். இதற்கு பதிலாக ஹோட்டல்கள் 29ம் தேதியன்று அடைக்கப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பாதுகாப்பு கருதி இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் அடிப்படை தேவைகளான பால், மருந்துகள் மற்றும் மருத்துவமனைகள் மட்டும் திறந்து இருக்கின்றன. பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு, போக்குவரத்தும் முடங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in