கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம்; போலீஸாரின் கையை வெட்டி வழிப்பறி!

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

திருத்தணியில் அதிகரித்து வரும் கஞ்சா போதை ஆசாமிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கஞ்சா பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் தடையின்றி கஞ்சாவைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கஞ்சா போதை காரணமாக அடிதடி கொள்ளை, வழிப்பறி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், திருத்தணி அக்கையா நாயுடு சாலையில் நேற்று இரவு 11 மணி அளவில் வாலிபர்கள் சிலர், சிக்கன் பிரியாணி கடை நடத்தி வரும் ஜாபர்அலி என்பவரை பட்டா கத்தியில் வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்து ஜாபர் அலி, கூச்சலிட்ட நிலையில், சப்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதைப்பார்த்த, கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

இதைத்தொடர்ந்து, திருத்தணி அருகே கடம்பத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சுரேந்தர் என்ற காவலர் காந்தி ரோடு வழியாக நடந்து சென்ற போது, அவரை மடக்கி இடது கையில் வெட்டி, அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். தொடர்ந்து கீழ்பஜார் தெருவில் நடந்து சென்ற வஜ்ஜரவேல் என்பவரையும் கத்தியால் தாக்கி, செல்போனை பறித்து சென்றனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து சாலைகள் நடந்து சென்றவர்களை பட்டா கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, களத்தில் இறங்கிய திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தலைமையிலான போலீசார் இரவு முழுவதும் விடிய விடிய கஞ்சா போதை ஆசாமிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். 4 இளைஞர்களை மடங்கி பிடித்து அவர்களிடம் இருந்த 8 பட்டா கத்திகள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம், இரண்டு செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் பிடிப்பட்ட 4 பேர் சதிஷ்குமார், ஷியாம் சுந்தர், சேகர் வர்மா மற்றும் கிஷோர் என்பது உறுதி செய்யப்பட்டது. சந்துரு மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தப்பியோடியதும் தெரிய வந்தது. பிரியாணி கடை நடத்தி வரும் ஜாபர் அலிக்கும், இந்த கும்பலுக்கும் இடையே, முன்விரோதம் இருந்ததாகவும், அவரை தாக்கும் நோக்கத்துடன் பட்டாக்கத்தியுடன் வந்ததாகவும், ஆனால் அவர் பொதுமக்களின் உதவியால் தப்பியதாகவும் தெரிவித்தனர்.

இதனால், ஆத்திரத்தில் இருந்த 6 பேரும் பொதுமக்களை தாக்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் பதியப்பட்டு 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய இரண்டு பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், திருத்தணியில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in