டிக்டாக் பிரபலம் ‘ரவுடி பேபி’ குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

டிக்டாக் பிரபலம் ‘ரவுடி பேபி’ குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
ரவுடி பேபி

கோவை பெண்ணை தகாத வார்த்தைகளால் விமர்சித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி, குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த சூர்யா என்பவர், தனது பெயரை ‘ரவுடி பேபி’ என மாற்றி டிக்டாக்கில் வலம் வந்து கொண்டிருந்தார். டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர், மற்ற சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். இவரது பேச்சு மற்றவர்களை முகம் சுளிக்க வைத்தது. மேலும், அவரது வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைதளங்களில் எழுந்தது.

இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்திய யூடியூப் சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக, அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளால் ரவுடி பேபியும், மதுரையைச் சேர்ந்த சிக்கந்தர்ஷாவும் பேசியுள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண், கோவை மாவட்ட சைபர் க்ரைம் காவல் துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ரவுடி பேபியையும், சிக்கந்தர்ஷாவையும் கைது செய்து சிறையில் அடைந்தனர். சிக்கந்தர்ஷாவை காவல் துறையினர் ஏற்கெனவே குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

இதனிடையே, ரவுடி பேபியை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, ரவுடி பேபியை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதனால், ஒரு வருடத்துக்கு இனி ரவுடி பேபி ஜாமீனில் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.