தூக்கிட்டு கொலையான புலி: வன உயிர் ஆர்வலர்கள் அதிர்ச்சி

தூக்கிட்டு கொலையான புலி: வன உயிர் ஆர்வலர்கள் அதிர்ச்சி

மத்திர பிரதேசம் மாநிலத்தில் புலி ஒன்று தூக்கிட்டு கொல்லப்பட்டிருப்பது வன உயிர் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லுயிர் பெருக்கம் மற்றும் வன உயிரிகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே பூமியில், இயற்கைச் சூழலின் சமநிலையை காப்பாற்ற முடியும். மனிதர்களின் அத்துமீறல் மற்றும் பேராசைக்கான நடவடிக்கைகளால் வன உயிர்கள் அநியாயமாக கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. அவற்றில் ஒன்றாக மத்திய பிரதேசம் மாநிலம் பன்னா மாவட்டத்தில் புலி ஒன்று தூக்கிட்டு கொல்லப்பட்டுள்ளது.

பன்னா மாவட்டத்தின் வடக்கிலுள்ள விக்ரம்புரா கிராமத்தை ஒட்டிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நேற்றிரவு(டிச.6) புலியின் சடலம் அடையாளம் காணப்பட்டது. புலி இறந்ததற்கு இணையாக அது கொல்லப்பட்ட விதமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்கள் தூக்கிட்டு சாவதுபோல மற்றும் தண்டனைக்கு ஆளானது போல, புலி கொல்லப்பட்ட விதம் வன உயிர் ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

உயிரிகள் இந்த உலகில் பிறப்பதே மிகப்பெரும் வெற்றிக்கு உரியது என்பதால், எந்தவொரு உயிரியும் தாமாக சாவைத் தேடாது. உயிர் வாழ்தலும் அதற்கான தேடலுமே பரிணாம வளர்ச்சியில், இன்றுவரை உயிரிகள் அடைந்திருக்கும் தகவமைப்புக்கும் காரணமாகி இருக்கிறது. இந்த போராட்டத்தில் வலியன மட்டுமே எஞ்சும் என்பதால், முட்டாள் மனிதர்கள் தவிர்த்து வன உயிரிகள் எதுவும் தாமாக சாகும் முடிவை எடுப்பதில்லை. அவற்றை அவை அறிந்ததும் இல்லை.

எனவே பன்னாவில் கொல்லப்பட்ட புலி குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆராய்ந்தனர். அதன் முடிவில் ’வயர்’ இழைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பொறியில் புலி வீழ்ந்திருக்கலாம் என்றும், புலியைக் கொன்று தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்றும் பலவாறான கோணங்களில் விசாரித்து வருகின்றனர். புலி எதனால் இறந்தது என்ற உண்மை, பிரேத பரிசோதனையின் முடிவில் மட்டுமே தெரிய வரும்.

இதற்கிடையே மத்திய பிரதேச வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடுவோர் எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக திரிவதாகவும், அதற்கு தூக்கிட்டு புலி கொல்லப்பட்டிருப்பதே உதாரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் பன்னா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலும், அங்கே சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டத்தை உறுதி செய்திருக்கின்றன. தங்களது ஊடுருவலுக்கு அச்சுறுத்தல் எனக் கருதி, வேட்டையாளர்கள் புலியை கொன்றிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in