
உடுமலை அடுத்த அமராவதி வனச்சரகத்தில் வாயில் காயங்களுடன் புலியின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வனத்துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி என இரண்டு வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனப் பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை, மான்கள், காட்டு மாடு மற்றும் அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட கழுதகட்டி ஓடைப்பகுதியில் புலி ஒன்று வாயில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், புலியை பார்வையிட்ட போது, உயிரிழந்த புலி, 9 வயதுடைய ஆண் புலி என்பது தெரியவந்தது. மேலும் புலியின் வாயில் காயங்கள் தெரிவதால் வேட்டையாடுபவர்களால், புலி கொல்லப்பட்டதா அல்லது இயற்கையாக உயிரிழந்ததா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் புலியின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய, உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2 மாதத்தில் மட்டும் கோவை மண்டல வனப்பகுதிகளில் கிட்டத்தட்ட 11 புலிகள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரியில் தேசிய புலிகள் ஆணைய அதிகாரிகள் நடத்திய ஆய்வில், உயிரிழந்த 9 புலிகளில், 7 புலிகள் மட்டுமே இயற்கையாக உயிரிழந்திருந்தது தெரியவந்தது. தற்போது ஆனைமலை புலிகள் காப்பகத்திலும் புலி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.