பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்ட முன்னாள் மாணவர்: கேரளாவில் பரபரப்பு!

துப்பாக்கியுடன் ஜெகன்.
துப்பாக்கியுடன் ஜெகன்.

திருச்சூரில் உள்ள விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகுந்து முன்னாள் மாணவர் இன்று துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

கேரளா மாநிலம், திருச்சூரில் விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஜெகன் என்ற முன்னாள் மாணவர் இன்று காலை 10.15 மணிக்கு பள்ளிக்குள் புகுந்தார்.

ஆசிரியர் ராமதாஸ், முன்னாள் தலைமை ஆசிரியர் குறித்து விசாரித்தார். அப்போது அவர்கள் பள்ளியில் இல்லை. இதனால் துப்பாக்கியைக் காட்டி ஊழியர்களையும், மாணவர்களையும் ஜெகன் அச்சுறுத்தினார்.

அத்துடன் மாணவர்களின் வகுப்பறைக்குள் சென்று மூன்று முறை துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து ஜெகன் தப்பியோட முயன்றார். ஆனால், அவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிட்ம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட ஜெகன், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஏர் கன்.
கைது செய்யப்பட்ட ஜெகன், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஏர் கன்.

இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், பிளஸ் 1-க்குப் பிறகு ஜெகன் பள்ளியை விட்டு வெளியேறினார். ஆசிரியர்கள் திட்டியதால் பள்ளியை விட்டு வெளியேறிய அவர் இறுதித்தேர்வுக்கு வரவில்லை என்றனர்.

திருச்சூர் கிழக்கு போலீஸார், ஜெகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அவரது தந்தையையும் வரவழைத்துள்ளனர். திருச்சூரில் உள்ள முலாயம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இந்தச் செயலின் பின்னணி என்ன என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து ஏர்கன்னை பறிமுதல் செய்துள்ளனர். அவர் சுட்டத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.கிருஷ்ண தேஜா உடனடியாக பள்ளிக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றும், பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in