
பிரசவித்த தாய் மரணமடைந்ததை அடுத்து அவரது ஆண் குழந்தையை விற்பனை செய்ததாக சுகாதார பணியாளர்கள் இருவர் உட்பட 3 பெண்கள் ஜார்கண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டம், மனோகர்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்தேறி உள்ளது. முன்னி சாம்பியா என்ற பெண்ணுக்கு, சுகாதார பெண் பணியாளர்கள் இருவர் சட்ட விரோதமாக பிரசவம் பார்த்தனர். இதில் பிரசவத்தின் போது எழுந்த எதிர்பாரா மருத்துவ சிக்கல்கள் காரணமாக, பிரசவித்த தாய் பரிதாபமாக இறந்து போனார்.
செப்.30 அன்று நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த முன்னி சாம்பியா, அக்.1 அன்று இறந்து போனார். இதனையடுத்து சத்னா சாஹு மற்றும் சந்து சாம்பியா ஆகிய சுகாதார பணியாளர்கள் இருவரும், சட்ட விரோத முறையில் குழந்தையை விற்க முடிவு செய்தனர்.
அதன்படி சந்தில் என்ற இடத்தில் வசிக்கும் குட்டி குப்தா என்ற பெண்ணிடம் பேரம் பேசி குறிப்பிட்ட தொகைக்கு, ஆண் குழந்தை விற்கப்பட்டது. ஆனால் பிறந்து சில நாட்களேயான அந்த ஆண் சிசு, தாய்ப்பால் மற்றும் அரவணைப்பு கிட்டாததில் சதா அழுதுகொண்டே இருந்தது. இதனால் குழந்தையின் உயிருக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்று பயந்து போன குட்டி குப்தா, தனக்கு அக்குழந்தையை விற்ற பெண் சுகாதாரப் பணியாளர்கள் இருவரையும் தேடி வந்தார்.
பிறந்த குழந்தையுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் அலைந்த குட்டி குப்தா காவல்துறை பிடியில் சிக்கியபோது, பிரசவத்தில் இறந்த தாய் முதல் விற்கப்பட்ட சேய் வரை பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. இதனையடுத்து சத்னா சாஹு, சந்து சாம்பியா ஆகிய சுகாதாரப் பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருமணம் ஆகாது குழந்தை பெற்றுக்கொண்ட முன்னி சாம்பியா பிரசவ சிக்கலில் இறந்ததையும், அவரது ஆண் குழந்தையை விற்றதையும் சுகாதாரப் பணியாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் இருவருடன், குழந்தையை சட்டவிரோதமாக விலைக்கு வாங்கிய பெண்ணையும் சேர்த்து போலீஸார் கைது செய்துள்ளனர்.