2007-ல் ஐம்பொன் சிலைகள் திருட்டு: 2022-ல் 3 பேருக்கு சிறை தண்டனை

2007-ல் ஐம்பொன் சிலைகள் திருட்டு: 2022-ல் 3 பேருக்கு சிறை தண்டனை

திருவாரூர் மாவட்டத்தில் சிலை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட மூவருக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள பெரம்பூரில் வெங்கடாசலபதி கோயில் உள்ளது. கடந்த 2007 செப்டம்பர் 30-ல் இக்கோயிலில் உள்ள ஐம்பொன்னாலான, வெங்கடாசலபதி சிலை திருடுபோனது. இது குறித்து நீடாமங்கலம் போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஒரு கட்டத்தில் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த சிலை கடத்தல் பிரிவு போலீஸார் இந்தத் திருட்டு தொடர்பாக திருவாரூர் மாவட்டம், பள்ளிவாரமங்கலம், நடுத்தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் இந்திரஜித்(47), பூவனூர், அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜ்குமார்(35), மன்னார்குடி, சஞ்சீவிராயன்கோயில் தெருவைச் சேர்ந்த சின்னதுரை மகன் இளங்கோவன்(46) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இவ்வழக்கு கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி டி.சண்முகப்பிரியா இன்று வழக்கின் தீர்ப்பினை அளித்தார். குற்றம்சாட்டப்பட்டுள்ள மூவருக்கும் குற்றத்தை உறுதி செய்து 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்குக் காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in