அதிர்ச்சி வீடியோ... தேர்தல் பணி போலீஸார் மீது பாய்ந்த கன்டெய்னர் லாரி; 3 பேர் பலி, 12 போலீஸார் படுகாயம்

விபத்தில் பலியான போலீஸார்
விபத்தில் பலியான போலீஸார்

பீகாரில் தேர்தல் பணிக்காக சென்ற போலீஸார் மீது கனரக வாகனம் மோதிய விபத்தில் 3 போலீஸார் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 12 போலீஸார் படுகாயமடைந்துள்ளனர்.

பீகார் மாநிலத்திலுள்ள சுபாலுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிக்காக சென்ற போலீஸார், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் இந்த கோர விபத்துக்கு ஆளானார்கள். தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பர்ஹிமா பஜார் அருகே நின்றிருந்தபோது, ​​பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி மோதியதில் விபத்து நிகழ்ந்ததாக கோபால்கஞ்ச் மாவட்ட எஸ்பி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 12க்கும் மேலான போலீஸார் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் நடந்த விதம் பீகார் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாலையில் சற்று ஓரமாக ஒன்றபின் ஒன்றாக போலீஸார் பயணித்த பேருந்துகள் நின்றிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி, கடைசியாக நின்ற பேருந்து மீது மோதியது. இதனால் அடுத்தடுத்த பேருந்துகளுக்கு இடையே நின்றிருந்த போலீஸார் உடல் நசுங்கி இறந்தனர். அவ்வாறு சிக்கிக்கொண்ட போலீஸாரை மீட்கத் தடுமாறும் சக போலீஸாரின் தடுமாற்றத்தை பதிவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விபத்தில் 3 காவலர்கள் உயிரிழந்தது மற்றும் பலர் காயமடைந்ததற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்த காவலர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குமார் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, விபத்தில் இறந்த போலீஸார் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் பணியின் போது போலீஸார் உயிரிழந்து இருப்பதால் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்குமாறு, தேர்தல் ஆணையத்திடம் மாவட்ட தேர்தல் அதிகாரி வாயிலாக பீகார் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது. இதனுடன், உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை வழங்கவும் பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in