
பஞ்சாப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்பட மூன்று பேர் கை, கால்களைக் கட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், டர்ன் தரன் மாவட்டம் ஹரிகேபட்டன் டவுன் அருகே உள்ள துங் கிராமத்தைச் சேர்ந்தவர் இக்பால் சிங். இவரது மனைவி லக்விந்தர் கவுர். இவரது சகோதரி சீதா கவுர். இவர்கள் மூவரும் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் இக்பால் சிங் வீட்டிற்கு வந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்.
இக்பால் சிங், அவரது மனைவி லக்விந்தர் கவுர், சீதா கவுர் ஆகியோர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வெவ்வேறு அறைகளில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். நேற்று இரவு அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மூன்று கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்திய போது, இக்பால் சிங் வீட்டில் வேலைசெய்த வேலைக்காரர் தான் இந்த கொலைகளைச் செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த மூன்று கொலைகள் நடந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள வீட்டின் வேலைக்காரரை போலீஸார் தேடி வருகின்றனர். கை, கால்களைக் கட்டி மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.