
பூந்தமல்லி அருகே வாகனச்சோதனையின் போது காரில் கைதுப்பாக்கியுடன் வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நசரத்பேட்டை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூந்தமல்லி நசரத்பேட்டை திரௌபதி அம்மன் கோயில் வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் போலீஸார் மீது மோதுவது போல் வந்து வேகமாக தப்பிச் சென்றது.
இதையடுத்து போலீஸார் அந்த காரை விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது காரில் கைத்துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. அப்போது காரில் வந்த 4 பேரில் ஒருவர் மட்டும் தப்பிச் சென்ற நிலையில் மற்ற 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு 9 எம்எம் துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள் மற்றும் காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் மூன்று பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் அரண்வாயில் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்(24), நசரத்பேட்டையை சேர்ந்த சுனில்(23), மேப்பூர் தாங்கலை சேர்ந்த நரேஷ்குமார்(23) என்பதும், தப்பி ஓடியவர் நாகேந்திரன் என்பதும் தெரிய வந்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பாஜக பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கரை வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் சாந்தகுமார் தனது கைத்துப்பாக்கியை பிடிபட்ட நபர்களிடம் கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
சாந்தகுமார் எதற்காக துப்பாக்கியை இவர்களிடம் கொடுத்து வைத்துள்ளார், எங்கிருந்து துப்பாக்கி வாங்கப்பட்டது, யாரையேனும் கொலை செய்யும் நோக்கில் இவர்கள் துப்பாக்கியுடன் சென்றார்களா என பல கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய நாகேந்திரனை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையில் வாகனச் சோதனையில் 3 பேர் துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவம் காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; வங்கக்கடலில் நாளை உருவாகும் 'மிதிலி' புயல்: வானிலை மையம் எச்சரிக்கை!
இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!
'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!
உத்தரப் பிரதேசத்தில் டெல்லி-சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயிலில் தீவிபத்து... 19 பேர் காயம்