மனைவிக்குக் செல்போனில் தொந்தரவு: தட்டிக்கேட்ட கணவரை கொன்ற 3 பேர் கைது!

மனைவிக்குக் செல்போனில் தொந்தரவு: தட்டிக்கேட்ட கணவரை கொன்ற 3 பேர் கைது!
கைதான மூன்று பேர்

மதுரை காமராஜர்புரம் திருவிக தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(40). அலுமினியப் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், ராஜேஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அதிகாலையில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு ராஜேஷ்குமார் எழுந்து சென்று பார்த்தபோது, மூன்று பேர் கத்தியால் அவரைக் குத்திவிட்டு தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்குமாரை அப்பகுதியினர் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ்குமார் அன்றே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக கீரைத்துரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜேஷ்குமாரின் வீட்டிற்குக் கிருமி நாசினி தெளிக்க வந்த மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த பணியாளரான மருது என்ற மருது சூர்யாவுக்கும், ராஜேஷ்குமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில், ராஜேஷ்குமாரின் மனைவி சத்யாவிற்கு, மருது சூர்யா தான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை வாங்கித் தந்துள்ளார். சத்யாவும் வேலைக்குச் சென்று வந்துள்ளார், இதற்கிடையில், ராஜேஷ்குமார் சத்யாவை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி நிறுத்திவிட்டார்.

கொலை செய்யப்பட்ட ராஜேஷ்குமார்
கொலை செய்யப்பட்ட ராஜேஷ்குமார்

இந்நிலையில் மருது சூர்யா, தொடர்ந்து சத்யாவை கைப்பேசியில் அழைத்து வந்துள்ளார். இதை தனது கணவர் ராஜேஷ்குமாரிடம் சத்யா கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, மே 29-ம் தேதி இரவு மருது சூர்யாவை அழைத்து, சத்யாவுக்கு, கைப்பேசியில் அழைத்துத் தொந்தரவு செய்யக்கூடாது என்று ராஜேஷ்குமார் கண்டித்துள்ளார். இதில், அவமானமடைந்ததாக கருதிய மருது சூர்யா தனது நண்பர்களான வண்டியூரைச் சேர்ந்த சந்தோஷ், சின்னக்கண்மாய் பகுதியைச் சேர்ந்த தக்காளி சதீஷ் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.

அப்போது, ராஜேஷ்குமாரைக் கொலை செய்வது என்று திட்டமிட்டு அதிகாலையில் மூவரும் அவரது வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளனர், கதவைத் திறந்த ராஜேஷ்குமாரை தக்காளி சதீஷ், சந்தோஷ் இருவரும் பிடித்துக்கொள்ள கத்தியால் மருது சூர்யா பலமுறை அவரைக் குத்திவிட்டுத் தப்பிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, மறைவிடத்தில் பதுங்கியிருந்த மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து மூவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி நேற்று இரவு மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in