தென்னங்கீற்றுக்குள் கஞ்சா: கொத்தாக அள்ளியது போலீஸ்

தென்னங்கீற்றுக்குள் கஞ்சா: கொத்தாக அள்ளியது போலீஸ்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றவர்களை கொத்தாக கைது செய்திருக்கிறது கடலோர காவல்துறை.

வேதாரண்யத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தவுள்ளதாக, வேதாரண்யம் கடலோர காவல் துறையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து துணைக் காவல் கண்காணிப்பாளர் குமாரின் உத்தரவின்படி வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் செல்வராசு தலைமையிலான காவலர்கள் ஆறுகாட்டுத்துறை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது, தென்னங்கீற்றுகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 சாக்கு மூட்டைகள் இருந்தன. அந்த சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது அவை அனைத்தும் கஞ்சா என தெரியவந்தது. வாகனத்தை ஓட்டி வந்த ஆறுகாட்டுத்துறை, சுனாமி நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து, வேதாரண்யம் கடலோர காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர்.

விசாரணையில் ஆறுகாட்டுத்துறை வடக்குத் தெருவைச் சேர்ந்த பாரதி (எ) பாரதிதாசன் என்பவருக்கு அந்த கஞ்சா சொந்தமானது என தெரியவந்ததையடுத்து அவரையும் கைது செய்தனர். மேலும் இலங்கை நாட்டை சேர்ந்த அகதி காந்தரூபன் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து கடற்கரையில் நின்று கொண்டிருந்த அவரையும் கைது செய்தனர். கைப்பற்றப் பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 25 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.