கடத்தி வரப்பட்ட கள்ளச்சாராயம்... தமிழகத்திற்கு வந்த கும்பல் சிக்கியது: இரவில் போலீஸ் அதிரடி

சாராயம் கடத்தி வந்தவர்களும், சாராயமும்
சாராயம் கடத்தி வந்தவர்களும், சாராயமும்

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பாண்டி சாராயம் கடத்தியவர்களை கைது செய்த நாகப்பட்டினம் மாவட்ட போலீஸார், அவர்களிடமிருந்து 450 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 170 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டத்தில் மதுகடத்தல் குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் விளைவாக கடத்தல் மது ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவ்வகையில் நாகப்பட்டினம் மதுவிலக்கு அமல் பிரிவினர் நேற்று இரவு பாலையூர் பிள்ளையார் கோயில் அருகில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வந்த மூன்று இருசக்கர வாகனங்களை மறித்து சோதனை செய்தனர். அப்போது வாகனங்களில் பின்னால் அமர்ந்து இருந்தவர்கள் வாகனத்தில் இருந்து சிலர் குதித்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அந்த வாகனங்களை தீவிரமாக சோதனை செய்தனர்.

சோதனையில் அவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராய பாக்கெட்டுகளையும், சாராயக் கேன்களையும் கடத்தி வருவது கண்டறியப்பட்டது. அவர்களில் செல்லூர் சுனாமி குடியிருப்பு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயபாண்டி மகன் பிரசாந்த் என்பவரிடம் இருந்து 180 மிலி அளவு கொண்ட 200 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல நாகப்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த வில்லியம்ஸ் மகன் ஜெல்சன் என்பவர் கடத்தி வந்த 250 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதேபோல பெருங்கடம்பனூர் மில்தெருவைச் சேர்ந்த நித்தியானந்தம் மகன் ஹரிஹரன் என்பவரிடமிருந்து 170 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. சாராயம் கடத்தி வந்த 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய பெருங்கடம்பனூர் பாண்டிதுரை, தினேஷ் தங்கப்பாண்டி ஆகியோரையும், இவர்களுக்கு சாராயம் விற்பனை செய்த டி.ஆர்.பட்டினத்தை சேர்ந்த ஜி.எஸ் சாராயக்கடை உரிமையாளர் பார்த்திபன், மேலாளர் செல்வராஜ், ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

'மது கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் மற்றும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள், தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள்' என்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in