கூவத்தில் குதித்து 
திருடர்களை பிடித்த போலீஸ்!

கூவத்தில் குதித்து திருடர்களை பிடித்த போலீஸ்!

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் மருந்துக் கடையின் ஷட்டரை உடைத்துக் கொள்ளையடித்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்த போலீஸார், 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாப்பூர் பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை போலீஸார் விரட்டிப் பிடிக்க முற்பட்டபோது, கூவத்தில் குதித்துத் தப்பிக்க முயற்சி செய்தனர். உடனே போலீஸாரும் கூவத்தில் குதித்து, கொள்ளையர்களைப் பிடித்துக் குளிப்பாட்டிக் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து, சிறையில் அடைத்தனர்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் ஹாரிங்டன் சாலை சாரி தெருவைச் சேர்ந்தவர் இக்பால்(44). இவர் நியூ ஆவடி சாலையில், தி நியூ சென்னை மருந்தகம் என்ற பெயரில் மருந்துக் கடை நடத்தி வருகிறார். கடந்த 4-ம் தேதி மருந்தகத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து, கடையில் வைத்திருந்த ரூ.1,50,000/- பணம் திருடுபோயிருப்பதாக, கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு காவல் துறையில் இக்பால் புகார் அளித்திருந்தார். போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர்.

கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம்வின்சென்ட் தலைமையிலான காவலர்கள், கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மயிலாப்பூர் பகுதியில் பதுங்கியிருந்த மந்தைவெளி சுப்பராயன் தெருவைச் சேர்ந்த பிக்சோ என்ற விஜயகுமார் (20), ஆவடியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற போண்டா ராஜேஷ்(20) என்ற இருவரைக் கைது செய்ய முற்பட்டபோது, அவர்கள் போலீஸின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றனர்.

தப்பிக்க முயற்சித்தவர்கள், அருகில் இருந்த கூவம் ஆற்றில் குதித்தபோது போலீஸாரும் கூவத்தில் குதித்து இருவரையும் பிடித்தனர். பிடிபட்ட விஜயகுமார், ராஜேஷ் இருவரையும் முழுமையாகக் குளிக்க வைத்துக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் மீது கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட விஜயகுமார் மற்றும் ராஜேஷிடமிருந்து ரூ. 55,000 பணமும், 2 செல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பின்னர், 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.