நடுவழியில் ரயிலை நிறுத்திய இளைஞர்... லோகோ பைலைட்டைத் தாக்கியதால் பரபரப்பு!
செங்கல்பட்டில் நடுவழியில் ரயிலை நிறுத்தி, லோகோ பைலட்டைத் தாக்கி, ரயிலை இயக்கி செல்ல முயற்சித்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்றுக் கொண்டிருந்த மின்சார ரயிலை செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் நின்றபடி இளைஞர் ஒருவர் வழி மறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லோகோ பைலைட் ரயிலை பாதி வழியில் நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து லோகோ பைலைட்டைத் தாக்கிய அந்த இளைஞர், ரயிலில் ஏறி அதனை இயக்க முயற்சி செய்துள்ளார். என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த லோகோ பைலைட் உடனடியாக அபாய ஒலியை (HORN )- யை ஒலித்துள்ளார். ரயில்வே நிலையம் அருகிலேயே இருந்ததால், உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீஸார் அந்த நபரை, சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
இதனை அடுத்து ரயில்வே போலீஸார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில், அரியலூர் மாவட்டம் வெள்ளந்தை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது, விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட நபர் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதால், மனநலம் பாதிக்கப்பட்ட நபரா என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இருந்தும் சில சமயத்தில், அந்த நபர் தெளிவாகவும் பேசி வருவதால் மருத்துவ பரிசோதனைக்கு, உட்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.