ஆன்லைன் டிரேடிங் மூலம் கோடிக்கணக்கில் மோசடி... தில்லாலங்கடி பெண்ணை மடக்கி போலீஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

மதுமிதா
மதுமிதா

ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மடக்கிப் பிடித்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா. 32 வயதான இவர் தன் உடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களை தொடர்பு கொண்டு ஆன்லைன் டிரேடிங் மூலம் தான் புதிதாக தொழில் துவங்கியுள்ளதாகவும் அதில் முதலீடு செய்தால் மாதம் தோறும் முதலீட்டிற்கான லாபத் தொகையை தருவதாகவும் கூறியுள்ளார்.

அவரது பேச்சை நம்பிய பலரும் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடாக செலுத்தியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் முதல் மாதம் மட்டும் லாபத்தொகை என்ற பெயரில் சிறிதளவு பணத்தை கொடுத்த அந்த பெண் பின்னர் முதலீடு செய்த நிறுவனத்தில் தான் இழப்பை சந்தித்ததாகவும் செலுத்திய பணத்தை விரைவில் தருவதாகவும் கூறியபடியே கோவையிலிருந்து திடீரென தலைமறைவாகியுள்ளார்.

மதுமிதா
மதுமிதா

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மதுமிதாவை பாதிக்கப்பட்டவர்கள் தேடி வந்த நிலையில் அவர் துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று துபாயிலும் மோசடியில் ஈடுபட்டதால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க இருப்பது தெரிய வந்தவுடன் துபாயிலிருந்து விமானம் மூலம் மதுமிதா கேரளாவிற்கு வந்துள்ளார்.

அவர் கேரளாவிற்கு வரும் தகவல் தெரிந்த துபாயில் வசிக்கும் சிலர், ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளாவில் மதுமிதாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவரை, விமான நிலையத்திற்கு அனுப்பிய பாதிக்கப்பட்டவர்கள், அங்கிருந்து மதுமிதாவிற்கு உதவுவதாக கூறி அவரை காரில் ஏற்றி கோவைக்கு அழைத்து வந்துள்ளனர்.

தொடர்ந்து நேற்று இரவு பாதிக்கப்பட்ட சுமார் 20 பேர் மதுமிதாவை கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் காவல் நிலையத்தில் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள இயலாது. நாளை காலை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு தெரிவித்த நிலையில் விடிய விடிய அப்பெண்ணுடன் ஐந்து கார்களில் வந்த பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலைய வளாகத்திலேயே இருந்துள்ளனர்.

இதனிடையே காரில் இருந்து அதிகாலையில் திடீரென தப்பிய மதுமிதா சாலையில் ஓட்டம்பிடித்தார். அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காரில் வைத்து, விடியும் வரையில் கோவை பந்தய சாலை பகுதியிலேயே வட்டம் அடித்துள்ளனர். தொடர்ந்து அப்பெண்ணை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை மாநகர  குற்றப்பிரிவு அலுவலகம்
கோவை மாநகர குற்றப்பிரிவு அலுவலகம்

மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்கு 20 ஆயிரம் ரூபாய் லாபம் என்ற அடிப்படையில் முதலீடு செய்ததாகவும், துவக்கத்தில் பணம் தந்த மதுமிதா பின்னர் பணம் தராமல் இழுத்தடித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தனர். மோசடியில் ஈடுபட்ட மதுமிதாவை தாங்களாவே பிடித்து காவல் நிலையத்தில் நேற்று இரவே ஒப்படைக்க சென்றபோது போலீஸார் விடியவிடிய தங்களை அலைக்கழித்ததாகவும் தெரிவித்தனர்.தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட மதுமிதாவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in