`யாரை கண்டாலும் அஞ்சி நடுங்குகிறாள்'- பள்ளியிலேயே 1-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியையால் நடந்த கொடுமை

`யாரை கண்டாலும் அஞ்சி நடுங்குகிறாள்'- பள்ளியிலேயே 1-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியையால் நடந்த கொடுமை

மனவளர்ச்சி குன்றிய 1-ம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆசிரியைகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி தாமோதரன் 1-வது தெருவை சேர்ந்தவர் திவ்யா(27). கணவரை இழந்த திவ்யா பியூட்டி பார்லரில் வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இவரது 6 வயது மகள் சற்று மனவளர்ச்சி குன்றியதாக கூறப்படுகிறது. சிறுமி பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள கல்கி ரங்கநாதன் மான்போர்ட் ஸ்பெஷல் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திவ்யாவின் தந்தை கலைசெல்வன் காலை சிறுமியை பள்ளியில் விட்டு விட்டு, பின்னர் மதியம் சிறுமியை அழைக்க சென்றார். அப்போது பள்ளி ஆசிரியர் ஒருவர் சிறுமிக்கு கை, கால்களில் காயம் இருக்கிறது, ஏன் பள்ளிக்கு அனுப்புகிறீர்கள் என கலைசெல்வனிடம் கேட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்து போன கலைசெல்வன் காலையில் குழந்தை பள்ளிக்கு வரும் போது நன்றாக இருந்ததாகவும், பள்ளியில்தான் குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளது எனக்கூறி ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் சிறுமியின் தாய் திவ்யாவிற்கு தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கு ஓடிவந்த திவ்யா, ஆசிரியர்களிடம் தனது மகளுக்கு நடந்த கொடுமையை குறித்து கேட்டுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் இது குறித்து எந்த பதிலும் கூறாததால் ஆத்திரமடைந்த திவ்யா பள்ளி ஜன்னல் கண்ணாடியில் தலையால் மோதி கொண்டதில் ஜன்னல் கண்ணாடி உடைந்து திவ்யா தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் திவ்யா செம்பியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகம் மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பள்ளியில் பொறுத்தியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆசிரியைகளிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து திவ்யா கூறுகையில், "தனது மகள் கை, கால்களில் சூடு வைத்து கொடுமைப்படுத்திவிட்டு, எந்த பதிலும் கூறாமல் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறது. பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி குழந்தையை பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் அங்கேயே பாதுகாப்பில்லை. தனது குழந்தையை சூடு வைத்து கொடுமைப்படுத்தியதால் குழந்தை யாரை கண்டாலும் அஞ்சி நடுங்குகிறது. எனவே பள்ளி நிர்வாகம் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in