காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட சென்ற இளைஞர் மர்ம மரணம்: குமரியில் பரபரப்பு

அஜித்
அஜித்

காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயிர் இழந்த அஜித்தின் தந்தை சசிகுமார் காமதேனு இணையத்திடம் கூறுகையில், “எனது மகன் அஜித் கடந்த 23-ம் தேதி குலசேகரம் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்றில் நிபந்தனைக் கையெழுத்துப் போடச் சென்றார். ஆனால் அன்று மதியமே என் வீட்டிற்கு வந்த குலசேகரம் போலீஸார் உங்கள் மகன் எங்கே என்றார்கள். நான் காலையிலேயே ஸ்டேசனுக்கு கையெழுத்துப் போட வந்தானே என்றேன். உடனே, போலீஸ்காரர்கள், உங்கள் மகன் அஜித் அரசமூடு சந்திப்பில் விசம் அருந்தி கிடந்ததாகவும், இப்போது தும்பகோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் சொன்னார்கள், என்னை அவர்களோடு வரச்சொல்லி மிரட்டினார்கள். நான் காவல்துறை வாகனத்தில் வரமாட்டேன் என்றேன். ஆனால் என்னை மிரட்டி நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். நான் தனியாகக் வாகனம் பிடித்துப் போனேன். அங்கே சென்றதும், என்னை மிரட்டி காகிதங்களில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள்.

என் மகன் வீட்டில் இருந்து காவல் நிலையம் சென்றபோது சந்தோசமாகத்தான் சென்றான். அவனது செல்போன் காவல்நிலையத்தில் இருப்பதாகவும் அதை வாங்கிவருவேன் என்றும் சொல்லிச் சென்றான். காவல் நிலையத்தில் வைத்து அவனைத் தாக்கி போலீஸாரே விஷம் கொடுத்ததாக சந்தேகிக்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சையில் 23-ம் தேதியில் இருந்தே, இருந்த எனது மகன் நேற்று இரவு உயிர் இழந்தார்”என்றார். நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இருக்கும் அவரது மகனின் உடலையும் வாங்க மறுத்து போராடி வருகின்றனர்.

பின்னணி என்ன?

குலசேகரம், முல்லைசேரிவிளையைச் சேர்ந்த அஜித் ஐடிஐ முடித்துவிட்டு மினி டெம்போவில் டிரைவராக இருந்தார். அவரது பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் மதுபோதையில் அஜித் தகராறு செய்ததாகக் கைதுசெய்யப்பட்டார். அந்த வழக்கில் இருமாதங்களுக்குப் பின்பு ஜாமினில் வந்தவர் குலசேகரம் காவல்நிலையத்தில் நிபந்தனைக் கையெழுத்துப் போட்டுவந்தார். இந்நிலையில் தான் அவர் தற்கொலை செய்திருப்பதாக போலீஸாரே வீட்டில் வந்து சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோரோ, இதை மர்ம மரணம் என காவல்துறையைக் குற்றம் சாட்டியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in