செல்போனில் கேம்! - தடுத்த ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்

ஆசிரியர் ராஜா, மாணவர் சாய் சங்கர்
ஆசிரியர் ராஜா, மாணவர் சாய் சங்கர்

வகுப்பறையில் செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மாணவன், ஆசிரியரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். ஆபத்தான நிலையில் ஆசிரியர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த அதிர்ச்சி சம்பவம் காரைக்குடியில் நடந்துள்ளது.

காரைக்குடி அமராவதிபுதூரில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, தேவகோட்டை அனுமந்தக்குடியைச் சேர்ந்த சாய் சங்கர் என்ற மாணவர் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், தனது செல்போனை கல்லூரிக்கு தினந்தோறும் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், வகுப்பறையில் மாணவர் சாய் சங்கர் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, ஓவிய ஆசிரியர் ராஜா, இதைக் கண்டித்ததோடு, செல்போனை கல்லூரி முதல்வரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, மாணவனை கண்டித்த முதல்வர், பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச் சொல்லியுள்ளார். இதைத் தொடர்ந்து பெற்றோர் கல்லூரிக்கு வந்து, முதல்வரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இதன் பின்னர், சாய் சங்கரை சஸ்பெண்ட் செய்யாமல் வகுப்பறைக்குச் செல்ல அனுமதித்துள்ளார் முதல்வர். இதனால், ஆசிரியர் ராஜா மீது மாணவர் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று வகுப்பறையில் ஆசிரியர் ராஜா பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 5 இடங்களில் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார் சாய் சங்கர். அப்போது, சக மாணவர்கள், சாய் சங்கரை மடக்கிப் பிடித்துள்ளனர். இதையடுத்து மாணவர் காவல் துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த ஆசிரியர் ராஜாவுக்கு காரைக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வகுப்பறையில் ஆசிரியரை மாணவர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in