`எங்களை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுங்கள்'

காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
`எங்களை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுங்கள்'

கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் குறித்து ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட 2 யூடியூப் சேனல்கள் மீதும் யூடியூப் சேனலில் பேசிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பேரி உதவி ஆணையர் ஹரி குமார் தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் பிரதிநிதிகள் 6 பேரை காவல் ஆணையரை சந்தித்து மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அலுவலகம் வரை அழைத்து வரவேண்டாமென்றும் தானே கீழே வந்து புகாரை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்த சைபர் க்ரைம் கூடுதல் துணை ஆணையர் சஜிதா, காவல் ஆணையர் அலுவலக வாயிலுக்குள் வந்த மாற்றுத்திறனாளை நேரில் சந்தித்து புகாரை பெற்றுக் கொண்டார். ஏற்கெனவே தொலைபேசி மூலமாக தனக்கு இது குறித்து புகார் வந்திருப்பதாகவும் அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்ததை அடுத்து கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் பிரதிநிதி ராஜா, "மாற்றுத் திறனாளிகள் பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல் மிகவும் கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தும் வகையிலும் தங்களின் அந்தரங்க விவகாரத்தை பொது வெளியில் வெளியிட்ட இரண்டு யூடியூப் சேனல் மற்றும் அதை நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளோம். இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து கலைந்து செல்ல உள்ளோம். அதிகாரி கூறியதுபோல் இரு நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.

பொதுவாகவே சாதி-மத உள்ளிட்ட பிரச்சினைகளில் கருத்து கூறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளை அவதூறு செய்யும் வகையில் பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. நடிகர் சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் கால் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தும் வகையில் வசனம் உள்ளது. தற்போதுவரை அந்த வசனம் நீக்கப்படவில்லை. சினிமாவில் மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்துவதை நடிகர்கள் தவிர்க்கவேண்டும்% என்று கேட்டுக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in