`உன் தந்தையை விடுவிக்க ரூ.15 லட்சம் கொடு'- இலங்கை தொழிலதிபரை கடத்தி மகளை மிரட்டிய 4 பேர் கைது

தொழிலதிபரை கடத்திய சித்ரா மற்றும் ரியாஸ்சுதீன்
தொழிலதிபரை கடத்திய சித்ரா மற்றும் ரியாஸ்சுதீன்

சென்னையில் கடத்தப்பட்ட இலங்கை தொழிலதிபர் பத்திரமாக மீட்ட காவல்துறையினர், கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தலில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேரை செய்தனர்.

இலங்கையைச் சேர்ந்த முகமது ஷாம்(42) என்பவர் கொட்டை பாக்கு மற்றும் பீடி ஆகியவற்றை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் 10-ம் தேதி தொழில் நிமிர்த்தமாக இலங்கையில் இருந்து சென்னை வந்த முகமதுஷாம் மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். மறுநாள் 11ம் தேதி மாலை தொழிலதிபர் முகமது ஷாமின் மகள் தனது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவரது செல்போனில் பேசிய அடையாளம் தெரியாத நபர், உன் தந்தையை கடத்திவிட்டதாகவும் 15 லட்சம் பணம் கொடுத்துவிட்டு தந்தையை மீட்டு செல்லுமாறு மிரட்டல் விடுத்துள்ளார்.

உடனே அவர், இ-மெயில் மூலம் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீஸார் தொழிலதிபர் முகமதுஷாம் தங்கி இருந்த விடுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன் சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் முகமதுஷாம் செல்போனை எண்ணை வைத்து ஆய்வு செய்த போது அவர் அண்ணாநகர் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தனிப்படை போலீஸார் அங்கு சென்று கடத்தப்பட்ட இலங்கை தொழிலதிபர் முகமதுஷாமை பத்திரமாக மீட்டதுடன் கடத்தல்காரர்கள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.‌

கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் முகமதுஷாமுக்கு அண்ணாநகரை சேர்ந்த சித்ரா(43) என்ற பெண்ணுடன் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தொழில் ரீதியாக நெருங்கி பழகி வந்த நிலையில் சித்ராவிடம், முகமதுஷாம் 5 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். பின்னர் கடனை திருப்பி கொடுக்காமல் முகமதுஷா தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையில் சித்ரா அவரை பல மாதங்களாக தேடிவந்தது தெரியவந்தது. இந்நிலையில் முகமதுஷாம் அனுப்பி வைத்த பாக்கு கொட்டை தூத்துக்குடி துறைமுகத்தில் சிக்கிக் கொண்டதால் அதனை வெளியே எடுக்க பணம் தேவைப்பட்டுள்ளது. ஆகையால் தெரிந்தவர்களிடம் பணம் வாங்க சென்னை வந்துள்ளார்.‌

அப்போது அவருக்கு நன்கு அறிமுகமான இலங்கையை சேர்ந்த ரியாஸ்சுதீன் அஸ்கர்(47), தான் பணம் வாங்கி தருவதாக கூறி முகமதுஷாமை அண்ணாநகரில் உள்ள தனது பெண் தோழி வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு சித்ரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த முகமதுஷாம் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது சித்ரா, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முகமதுஷாமை கடத்திச்சென்று அவரது மகளிடம் 15 லட்சம் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அண்ணாநகரை சேர்ந்த சித்ரா(43), ரியாஸ்சுதீன் (47), கே.கே.நகரை சேர்ந்த வேலு(41), தினேஷ்(31) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in