அவதூறு பேச்சாளர் அதிரடி கைது

அவதூறு பேச்சாளர் அதிரடி கைது
ஜமால் முகமது உஸ்மானி

பிரதமர் மோடி மற்றும் நீதிபதிகள் குறித்து அவதூறாகப் பேசிய திருநெல்வேலியை சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் அமைப்பின் மாநில பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மானி (43) என்பவரை போலீஸார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற கர்நாடக அரசின் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ‘ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய வி‌ஷயமல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்' என தீர்ப்பளித்தனர். இதற்கு நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மதச்சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தலைவர் அதிரை ராஜிக் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருநெல்வேலியை சேர்ந்த மாநில பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மானி (43) கலந்து கொண்டு பேசினார். ஹிஜாப் குறித்து தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், பிரதமர் மோடியை தூக்கிலிட வேண்டும் என்றும் பேசியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து ஜமால் முகமது உஸ்மானி மீது ஏரிப்புறக்கரை வி.ஏ.ஓ. கெளரிசங்கர் அதிராம்பட்டினம் போலீஸில் புகார் அளித்தார். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு, தஞ்சாவூர் நோக்கி வந்த முகமது உஸ்மானியை நேற்று இரவு வல்லம் சாலையில் சுற்றி வளைத்து போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.