நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம்... பிரேத பரிசோதனையில் புதிய தகவல்!

ஜெயக்குமார் தனசிங்
ஜெயக்குமார் தனசிங்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் அவரது உடல் பிரேத பரிசோதனையில்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 2-ம்தேதி மாயமான நிலையில் நேற்று வீட்டருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது கை, கால்கள் பலகையில் மின்சார வயரால் கட்டப்பட்டிருந்ததால், அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். அவர்களது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில்,அவரது கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் அவரது வயிற்றின் மேல் பகுதியில் இரும்புத்தகடு ஒன்று இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளதாக போலீஸார் தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காங்கிரஸ் பிரமுகர்கள் அஞ்சலி
காங்கிரஸ் பிரமுகர்கள் அஞ்சலி

கடந்த 30-ம்  தேதியே காங்கிரஸ் கட்சியின் லெட்டர் பேடில் மரண வாக்குமூலம் என்று அவர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் அதில்  தனக்கு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் இவர்கள் தான் காரணம் என சிலரது பெயரை குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜெயக்குமார் தனது மருமகன் மற்றும் மொத்த குடும்பத்தினருக்கு என்று எழுதிய 2 கடிதங்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், அவர் தொழில் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பலருக்குப் பணம் கொடுத்த விவரங்கள் மற்றும் தான், யார் யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

அதோடு குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில், குடும்பத்தினர் யாரும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களை பழிவாங்க நினைக்க வேண்டாம். சட்டம் தனது கடமையைச் செய்யும் எனவும் கூறியுள்ளார்.

ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையின்  அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை தொடர போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் உடலுக்கு இன்று காலை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அவரது உடல் அவரது மகன் கருத்தையா ஜெப்ரினிடம் ஒப்படைக்கப்பட்டு அவரது சொந்த ஊரான திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூருக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இதனையொட்டி ஜெயக்குமாரின் உடல் கொண்டு செல்லப்படும் வழியில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  நாங்குநேரி, திசையன்விளை பஜார், கரைசுத்துபுதூர், உவரி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in