ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடி வென்ற போலீஸ்காரர்... அதிரடி பணியிடை நீக்கம்!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடி வென்ற போலீஸ்காரர்... அதிரடி பணியிடை நீக்கம்!

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய ட்ரீம்11 ஆன்லைன் சூதாட்ட போட்டியில் புனே நகரைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பங்கேற்று ஒன்றரை கோடி ரூபாய் பரிசுத் தொகையை வென்றார். சோம்நாத் ஹெண்டே என்ற பெயர் கொண்ட இவர் புனே நகரின் பிம்ப்ரி சாவந்த் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

நடத்தை விதிகளை மீறியதாகவும், காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் கூறி அதிகாரிகள் இவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். முன்னதாக, போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கட்டுப்பாடற்ற வகையில் சோமநாத் பேசி வந்திருக்கிறார் மற்றும் அவரது நடத்தையில் சந்தேகத்திற்கு இடமான செயல்கள் இருந்துள்ளன.

இதையடுத்து காவல்துறை சார்பில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன் அனுமதியின்றி ஆன்லைன் சூதாட்ட போட்டியில் அவர் விளையாடியிருப்பதும், போட்டியில் வென்றது குறித்து காவல் சீருடை அணிந்து கொண்டு மீடியாக்களுக்கு பேட்டி அளித்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய காவல் உதவி ஆணையர் ஸ்வப்னா கோர், இது குறித்து கூறுகையில், "முன் அனுமதி இன்றி ஆன்லைன் சூதாட்ட போட்டியில் அவர் விளையாடியுள்ளார் என்பது விசாரணைக்கு பிறகு தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரை பணியிடைநீக்கம் செய்துள்ளோம்.

காவல் பணியில் இருப்பவர்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பங்கேற்க கூடாது என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு எச்சரிக்கையாக அமையும். அதை மீரும் பட்சத்தில் அவர்கள் மீதும் இதேபோன்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

சூதாட்ட போட்டியில் பங்கேற்ற காவல் உதவி ஆய்வாளர் சோமநாத்திற்கு எதிராக துறை ரீதியான தொடர் விசாரணை நடைபெறும் என்றும், அப்போது அவர் தரப்பு விளக்கத்தை அவர் அளிக்கலாம் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in