`உரிமையாளர்தான் கொலை செய்ய சொன்னார்'- போதை மறுவாழ்வு மைய ஊழியர்கள் வாக்குமூலம்

`உரிமையாளர்தான் கொலை செய்ய சொன்னார்'- போதை மறுவாழ்வு மைய ஊழியர்கள் வாக்குமூலம்

போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திக்- லோகேஸ்வரி தம்பதியினர் ராஜியை கொலை செய்ய சொன்னதாக கைதான ஊழியர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர்ஸ் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சென்ற ராஜி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் சென்னை அண்ணாசாலை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மையத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி ராஜியை மையத்தின் உரிமையாளர் கார்த்திக் லோகேஸ்வரி தம்பதி மற்றும் ஊழியர்கள் ஏழு பேர் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

குறிப்பாக மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் லோகேஸ்வரி தம்பதியினர் வீடியோ கால் மூலம் ஊழியர்களிடம் பேசிய, ராஜியை கொலை செய்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர். இதனை கொலை வழக்கில் கைதான ஊழியர்கள் வாக்குமூலமாக அளித்துள்ளனர். மையத்தின் உரிமையாளர்கள் கார்த்திகேயன் மற்றும் லோகேஸ்வரி தம்பதியை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும் போதை மறுவாழ்வு மையம் குறித்து விசாரணை நடத்தியதில், மன நல பாதுகாப்பு சட்டம் 2017 அடிப்படையில் உரிய அனுமதியின்றி செயல்பட்டதாக மாநில மன நல ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த போதை மறுவாழ்வு மையத்தை போலீஸார் சீல் வைத்துள்ளனர். அதில் சிகிச்சை பெற்று வந்த 12 பேரும், சிகிச்சை என்ற பெயரில் தாக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் அனைவருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்ற 12 பேர் உடலிலும் பல்வேறு காயங்கள் இருப்பதாகவும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

சிகிச்சை என்ற பெயரில் தாக்கப்பட்டதில் நடக்க முடியாத சூழ்நிலையிலும், பேசவே பயப்படக்கூடிய மனநிலையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.